குடும்பத்தகராறு காரணமாக தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டுத் தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வடகுரும்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள்(33). இவரது மனைவி ஜெயந்தி (26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கவிப்பிரியா (7), ரித்திவிகா (2) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து குளித்த பெருமாள், துடைப்பதற்காக மனைவி ஜெயந்தியிடம் துண்டு கேட்டுள்ளார். அப்போது ஜெயந்தி அழுக்கான துண்டை எடுத்துக் கொடுத்துள்ளார் இதனால் இருவரும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெருமாள் வீட்டை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
இதில் மனம் உடைந்த ஜெயந்தி இரு மகள்களுக்கும் ‘எலி பேஸ்ட்’ என்ற விஷ மருந்தைக் கொடுத்துள்ளார். பிறகு ஜெயந்தியும் அந்த எலி பேஸ்ட் மருந்தைச் சாப்பிட்டதில் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி குழந்தை ரித்திவிகா உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் எலவாசனூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயந்தியின் தாயார் கொளஞ்சி, தனது மருமகன் பெருமாள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பெருமாள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், தனது இரு குழந்தைகளுக்கும் விஷ மருந்து கொடுத்துவிட்டு அவரும் அதை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.