Skip to main content

துப்பாக்கி பாதுகாப்புடன் நடந்த மொய் விருந்து... அதிகபட்சமாக ரூ.4 கோடி தனி நபர் மொய் வசூல்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கிய மொய் விருந்தில் தினசரி கறி விருந்து நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மொய் வசூல் குறைந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் அதிகபட்சமாக தனி நபர் மொய் வசூல் ரூ. 4 கோடிகள் வரை மட்டுமே கிடைத்துள்ளது. 

 Moi Feast With Gun Safety ... Maximum Rs 4 crore Individual Moi Collection!


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த மாதம் தொடங்கிய மொய் விருந்துகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், அணவயல், புள்ளாண்விடுதி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆடி முதல் நாளில் இருந்து மொய்விருந்துகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 25 பேர்கள் வரை மொய் விருந்து செய்கின்றனர். வடகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மொய் விருந்து பந்தலில் தொடக்கத்திலேயே கள்ள நோட்டுகளையும், திருட்டுகளையும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

 

 Moi Feast With Gun Safety ... Maximum Rs 4 crore Individual Moi Collection!


இந்த நிலையில் இன்று வடகாடு முகிலன் பிளக்ஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனியாக மொய் விருந்து நடத்தினார். அதற்காக 50 ஆயிரம் பத்திரிக்கை, 500 பிளக்ஸ் அச்சடிக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டது. குடிதண்ணீர் பாக்கெட்டுகள் கொடுக்காமல் குவளையில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. விருந்து உபசரிப்பிற்காக மட்டும் சுமார் 100 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். விருந்து செலவு மட்டும் ரூ. 15 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் உடனுக்குடன் பணத்தை எண்ணவும், கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கவும் இயந்திரங்களுடன் தனியார் வங்கி ஊழியர்கள் சேவை மையம் அமைத்து செயல்பட்டனர். மேலும் மொய் எழுதுமிடம் மற்றும் சேவை மையம் அமைந்துள்ள பகுதிகளில் துப்பாக்கி எந்திய தனியார் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இத்தனை ஆண்டுகளில் நடந்த மொய் விருந்துகளில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்த ஒரு விழாவில் மட்டுமே. 

 Moi Feast With Gun Safety ... Maximum Rs 4 crore Individual Moi Collection!


சுமார் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மொய் வசூல் செய்யப்பட்ட நிலையில் மாலை எண்ணப்பட்டது. அதில் அவருக்கு ரூ. 4 கோடிகள் வரை மொய் வசூலாகி இருந்தது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும் போது.. வழக்கத்தைவிட இந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் மொய் வசூல் குறைந்துவிட்டது என்றனர். அதாவது.. வடகாடு உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களும் முற்றிலும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. அதில் கிடைக்கும் வருமானத்தில் மொய் விருந்து என்ற பெயரில் உறவினர்கள், நண்பர்களுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுத்து வந்தார்கள். இதனால் பல குடும்பங்கள் முன்னேறி உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்ததால் விவசாயிகளால் இன்னும் மீளமுடியவில்லை. அதனால் மொய் வசூலும் அதிகமாக குறைந்துவிட்டது. 

இன்று கிருஷ்ணமூர்த்திக்கு சுமார் ரூ. 9 கோடி வரை வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ரூ. 4 கோடிகள் தான் வந்துள்ளது என்றனர். மொய் விருந்து என்பது வட்டியில்லா கடன் என்ற போதிலும் பலர் வட்டிக்கு வாங்கி மொய் போட்டுவிட்டு இப்போது மொய் வசூல் குறைவதால் வட்டியும் கட்ட முடியாமல் வட்டிக்கு வாங்கிய பணமும் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்