Skip to main content

''வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்''-அவ்வையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு!  

Published on 14/02/2021 | Edited on 14/02/2021

 

Modi speech in chennai

 

டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று காலை சென்னை புறப்பட்ட நிலையில் சென்னை வந்து சேர்ந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என். எஸ் கடற்படைத் தளத்துக்கு சென்று அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள் விளையாட்டரங்கிற்கு காரில் வந்தார். அவருக்கு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

நேரு உள் விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வருவதற்கு முன்பாக பிரதமர் மோடி அர்ஜுன் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்தார். அதன்பிறகு 8000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை சால்வை அணிவித்து வரவேற்றார். அதேபோல் கிருஷ்ணர் சிலை ஒன்றையும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசாக அளித்தார். அதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக வரவேற்புரையாற்றினார். அதேபோல் முதல்வரும் வரவேற்புரையாற்றினார். 

 

 Modi returns to Coimbatore on Feb 25 ...

 

அதன்பின், பிரதமர் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3,370 கோடியில் முடிந்த மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-ஆவது ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். துறைமுகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 293.40 கோடியில் 22.1 கிலோமீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை சென்னை துறைமுகம் எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய தளங்கள் வழியாக செல்லும். அதேபோல் கல்லணை வாய்க்காலை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2,640 கோடியில் வாய்க்காலை நவீனப்படுத்துவதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லும் திறன் மேம்படும். விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சை பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு 14 கோடியே 60 லட்சம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Modi speech in chennai

 

தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி ''வணக்கம் சென்னை'' ''வணக்கம் தமிழ்நாடு'' என தமிழில் உரையை ஆரம்பித்தார். மேலும் அவர் பேசுகையில், ''இனிய வரவேற்பளித்த மக்களுக்கு நன்றிகள். சென்னையிலிருந்து முக்கியமான கட்டமைப்பு திட்டங்களை தொடங்கியுள்ளோம். தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும். சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 636 கிலோமீட்டர் தூரம் கல்லணையை புதுப்பிக்க இருப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு எனது பாராட்டு. நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்'' என்ற அவர், ''வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்'' என்ற அவ்வையார் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். 

 

அதேபோல் ''ஆயுதம் செய்வோம்... நல்ல காகிதம் செய்வோம்'' என்ற பாரதியின் பாடலையும் குறிப்பிட்டு ஆயுதங்களின் முக்கியத்துவம் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.

 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக பா.ஜ.க.வினருக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Prime Minister Modi praises Tamil Nadu BJP

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.

தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும்  பாராமல் ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

Prime Minister Modi praises Tamil Nadu BJP

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார். 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.