Skip to main content

“அமைச்சரை மாற்றியதற்கு பதிலாக மோடி பதவி விலகியிருக்க வேண்டும்” - கே.எஸ். அழகிரி பேட்டி! 

 

"Modi should have resigned instead of changing the minister" - KS Alagiri interview

 

மத்திய  அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு அளவில் ஆங்காங்கே பெரும் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் இதற்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சீனிவாசன் குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ராஜ்குமார், லதா பீட்டர் ராமமூர்த்தி, தயானந்தன், ஸ்ரீராம், சதீஷ் பிரபாகரன், வளவனூர் அண்ணாமலை உட்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, “பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீது செயற்கையான ஒரு விலையேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்வதால், சாதாரண கருவேப்பிலை கூட விலை ஏறுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நூற்றியெட்டு டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 70 ரூபாய் என விற்பனை செய்தோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோரும் நமது சகோதரர்கள் என்று கருதி காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது.

 

ஆனால் இன்றைக்கு மோடி அரசு மக்களை மதரீதியாக சாதி ரீதியாக பிரிக்கின்றது. ஏழை எளிய அடித்தட்டு மக்கள் படித்து முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் போன்ற தேர்வை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. பாஜக அரசு மக்களை அறிவு ரீதியாகவும் பிரிக்கிறது. உயர்ந்த அறிவு உள்ளவர்கள்தான் மருத்துவராக வர வேண்டும் என்கிறார்கள். அவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல், டீசல் விலையைப் பொருத்தவரை இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் ரூபாய் 50 டாலருக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதனால் பெட்ரோல், டீசல் விலை 35 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால், 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அதிகமாக விதிக்கிறார்கள். அதைப் பொதுமக்கள் தலையில் சுமத்துகிறார்கள்.

 

இந்தக் காரணத்தினால்தான் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் அனைத்துப் பொருட்களும் விலை ஏறுகின்றன. ஏழை எளியமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனைத் தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த விலையேற்றத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக் கூடாது என்பதுதான் கோட்பாடு. காங்கிரஸ் கட்சியும் அதனை வலியுறுத்துகிறது. காவிரியாக இருந்தாலும் வேறு எந்த நதியாக இருந்தாலும் அந்த தண்ணீர் ஒரு மாநிலத்திற்கு சொந்தமானது கிடையாது. ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி வரும்போது அதில் அவர்களுக்கு அதில் பங்கு உண்டே தவிர, அந்த நதியை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக காவிரி நீரை நாம் பயன்படுத்திவருகிறோம். கங்கை நதி சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் செல்கிறது. தற்போது மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழக அரசின் ஒப்புதல் ஆலோசனைகளையும் பெறவில்லை. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தால் எந்தப் பலனும் கிடைக்காது. சுகாதாரத்துறை அமைச்சரை மாற்றியதற்குப் பதிலாக பிரதமர் மோடி பதவி விலகியிருக்க வேண்டும்” இவ்வாறு பேசினார்.