Skip to main content

திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார் மோடி : முத்தரசன் பேட்டி

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
mutharasan

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது எனவும், மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு வடகோவை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காவிரி நதிநீர் பிரச்சனையில் மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைத்து வரும் வகையில் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கர்நாடக தேர்தலில் அரசியல் ஆதயாத்திற்காக நடுநிலையாக இல்லாமல், குறுகிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமல்ல என்ற நீர்வளத்துறை மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மீண்டும் சந்திப்பது பயனற்றது எனக்கூறிய அவர், மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மத்திய அரசிற்கு அரசியல் நெருக்கடி தரும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.  காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண கோரி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், தொடர் கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள் முடக்கம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென அவர் கூறினார். 

 

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் செய்கிறது எனக்கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில், தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


திரிபுராவில் ஆட்சி அதிகாரம், பண, படை பலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது எனவும், பிரிவினைவாதத்திற்கு எதிரான பேசும் மோடி, திரிபுராவில் வெட்கமற்ற முறையில் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் கம்யூனிசத்தை ஒரு போதும் அழிக்க முடியாது எனவும், திரிபுரா மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என முத்தரசன் தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத அரசாக உள்ளதாகவும், மக்கள் ஆதரவையும், தங்களது சட்டமன்ற உறுப்பர்களின் ஆதரவையும் இழந்து விட்டது எனவும்,ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

 

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த முத்தரசன், தமிழகத்தின் உரிமையை யார் பறித்தாலும் கடுகளவு கூட விட்டு கொடுக்க கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு என கூறினார்.

சார்ந்த செய்திகள்