Skip to main content

கரோனா நிவாரண நிதி அளித்த சிறுமிக்கு எம்.எல்.ஏ கொடுத்த சர்ப்ரைஸ்!!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
The girl who donated the corona relief fund; Chief Secretary who sent the letter, the MLA who bought the laptop

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களிடம் உயிர் காக்கும் பணிக்கு நிதி உதவி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக பல்வேறு தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், வியாபாரிகள் எனப் பல தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள அனிச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதனேசன், தமிழ்செல்வி தம்பதியரின் 10 வயது மகள் சிந்துஜா, உண்டியலில் தான் சேமித்துவைத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அனிச்சம்பாளையம் அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு முடித்துள்ள சிந்துஜா, சிறுவயதிலிருந்தே உண்டியலில் பணம் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். 

 

இந்த நிலையில் சிந்துஜா கொஞ்சம் கொஞ்சமாகத் தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1677 ரூபாயைக் காசோலையாக எடுத்து  முதல்வரின் நிவாரண நிதிக்குக் கடந்த 9ஆம் தேதி அனுப்பி வைத்திருந்தார். இதை அறிந்த தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, சிந்துஜாவின் இந்த செயலை பாராட்டி அவரது தந்தைக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், "முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய மாணவி சிந்துஜாவைப் பாராட்டுகிறேன், அவர் மேன்மேலும் படித்து தன் வாழ்நாளில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 

 

சிறுமியின் இந்த செயலை அறிந்த விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் சிறுமி சிந்துஜா மற்றும் அவரது பெற்றோரை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து தனது சொந்த பணத்தில் லேப்டாப் ஒன்றை வாங்கி, அதை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிறுமியிடம் கொடுத்துப் பாராட்டியுள்ளார். அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், சிறுமி சிந்துஜாவுக்கு மீண்டும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு உண்டியலைப் பரிசாக வழங்கியுள்ளார். அவர்களுடன் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்ரமனியன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்தனர். சிறுமி சிந்துஜா, தான் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தில், படிப்பதற்காக லேப்டாப் வாங்க வேண்டும் என எண்ணியிருந்த சிறுமி, லேப்டாப் வாங்கும் கனவைக் கைவிட்டு முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது விருப்பத்தைத் தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் நிறைவேற்றியுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்