Skip to main content

பிரமாண்டமாய் பெரியார் சிலையை சீரமைக்க ரூ.12 இலட்சம் நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ.!   

Published on 04/09/2020 | Edited on 04/09/2020

 

MLA allocates Rs 12 lakh to renovate Periyar statue


 
தமிழக மக்கள் மனதில் பெரியார் நிலைத்து இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. பெரியார் தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் பெரியாரின் பெயரைச் சொல்லி, அவரின் கொள்கையை முன்வைத்து அரசியலுக்கு வந்த கட்சிகள்தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. இதுதான் பெரியாரின் சாதனை என்பது பெரியாரியவாதிகளின் கருத்தாக உள்ளது.


இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை, பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பெரியார் உயிருடன் இருக்கும்போதே, அவர் முன்பே, அன்றைய முதல்வர் காமராஜர் அவர்களால், பல முக்கிய அரசியல் தலைவர்கள் சூழ திறக்கப்பட்டது தான் அந்த பெரியார் சிலை.

 

MLA allocates Rs 12 lakh to renovate Periyar statue

 
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையைச் சுற்றி மரங்கள் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் பலகைகள் பேருந்துகள் மோதி சேதமடைந்து காணப்பட்டன. இதைக்கண்ட திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கே.என்.நேரு, தனது சொந்த நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் தொகை கொடுத்து சிலையைப் புனரமைக்கும் பணியை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

 
அந்தச் சிலையின் பகுதிகளும், சிலையும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநகராட்சி பரிசீலித்து தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திராவிட அரசியலின் ஆத்திச்சூடியே பெரியார்தான். அவரால்தான் அண்ணா உருவாக்கப்பட்டார், அவரால் தான் கலைஞர் உருவாக்கப்பட்டார். எனவே, பெரியாரின் சிலையை சீரமைப்பது ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் முக்கியப் பணி. அதை நான் மேற்கொண்டு இருக்கிறேன் என்று பணியை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார் கே.என்.நேரு. செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Ad

 
பெரியார் சிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கும் நிலையில் அதற்கு பதிலடிகளை திராவிடக் கட்சிகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பெரியார் சிலையைப் புனரமைக்க 12 இலட்சம் ஒதுக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.