/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1548.jpg)
சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தது. அதன்படி முறையான பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக ஒரே ஆதார் அட்டையை வைத்து நூற்றுக்கணக்கான வங்கிகளிலும், ஒரே நபர் 500 பவுனுக்கு மேல் வங்கிகளில் 5 பவுன், 5 பவுனாக நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தது தெரியவந்தது. இதை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றிருப்பவர்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் திடுக்கிடும் தகவல்களும், முறைகேடுகளும் தெரியவந்தது. தமிழக முதல்வர் அறிவித்தபடி முறைப்படி நியாயமான பயனாளிகள் நகைக்கடன் தள்ளுபடியை பெற்று வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள், அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 22 லட்சம் பேர் தான் முறைப்படி 5 பவுனுக்கு கீழ் கடன் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 10 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்தில் 50 சதவிகிதம் பேர் பயனடைந்துள்ளனர்.
சுதந்திரம் அடைந்ததிதிலிருந்து இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். இந்த நகைக்கடன் தள்ளுபடியில் வருமான வரி கட்டும் அரசு ஊழியர்களுக்கு எப்படி கடன் தள்ளுபடி செய்ய முடியும். தற்காலிக அரசு பணியில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை. ஆனால், வருமானவரி கட்டுபவர்களும், நகைக்கடன்களை கட்டி நகைகளை பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி கிடையாது. அவர்களுக்கு முறையாக கேட்கும்போது வட்டியில்லாமல் நகைக்கடன் வழங்கப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டபோது சிறு, குறு விவசாயிகள், பெரு விவசாயிகள் என தரம் பிரிக்கப்பட்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழகத்தில் 22லட்சம் பேருக்கு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் போது சிறு, குறு என பிரித்தவர்கள் இப்போது நகைக்கடனை அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 400 பவுன் நகைகளை 5, 5 பவுனாக பிரித்து பல வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியும். 5 கோடியே 85 லட்சம் ரூபாயை ஒரே நபர் 5 பவுன் நகைகளாக வைத்து கடன் உதவி பெற்றுள்ளார். தர்மபுரி சேலம் பகுதியில் நகைக்கடன் உரிமையாளர்கள் பான் புரோக்கர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் கடன் தள்ளுபடி செய்ய சொல்லி எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ். சொல்கிறார்கள். இது முறையா?
கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு செய்தவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மக்கள் நலனுக்கான மக்களாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மாற்றுக்கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சொல்லி வருகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை” என்று கூறினார்.
நிகழ்ச்சியின்போது, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் பசீர்அகமது, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)