புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் ஆசியாவிலேயே உயரமான 33 அடி உயரம் கொண்ட பழமையான குதிரை சிலையுடன் அமைந்துள்ள தானவநாட்டு பெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில். திருப்பணிக் குழு, கிராம மக்கள், கொடையாளர்களின் பங்களிப்போடு திருப்பணிகள் முடிந்து கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எதிர்வரும் ஜூன் 16 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்க உள்ளது.
குடமுழுக்கில் அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, மெய்யநாதன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாஞ்சாலி செல்வகுமார், சரண்யா ரஞ்சித்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். குடமுழுக்கை முன்னிட்டு கீரமங்கலம் சிவாச்சாரியார் ரவிசங்கர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜையுடன் யாக பூஜைகளைத் தொடங்கி செய்து வருகின்றனர். நேற்று 3 வது நாள் யாகசாலை பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மெய்யநாதன் உட்பட விழாக்குழுவினர், கிராமத்தினர் யாகசாலை பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுகளை ஊர்வலமாக தூக்கி வந்து யாக பூஜையில் பங்கேற்றனர். முன்னேற்பாடுகள் பணிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும், கோயில் வளாகம் மற்றும் பனங்குளம் பாலம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளையும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குளமங்கலம் வடக்கு பாஞ்சாலி செல்வகுமார், குளமங்கலம் தெற்கு சரண்யா ரஞ்சித்குமார், பனங்குளம் தங்கராசு, ஒன்றியக் கவுன்சிலர் ரவி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.