Skip to main content

மாணவனின் மருத்துவக் கல்விக்கு உதவிசெய்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Minister Vijayabaskar assisted in the medical education of the student


கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்தில் உள்ள, பஞ்சமாதேவி என்ற கிராமத்தில், அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவர், கிராமங்கள்தோறும் சைக்கிளில் சென்று 'ஐஸ்' வியாபாரம் செய்து, தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரின் மகன் மாரிமுத்து, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார். 


பிறகு, நீட் தேர்வு எழுதி, அத்தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு முன்னுரிமை அடிப்படையில், மாணவன் மாரிமுத்துவுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படை கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில், இக்குடும்பம் இருந்துள்ளது. 


இத்தகவலை உள்ளூர் அ.தி.மு.க.வினர் மூலம் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து அம்மாணவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், அந்த மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அப்போதே, மாணவனின் முதலாம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.20,000 பணத்தை ரொக்கமாக மாணவரிடம் வழங்கியுள்ளார்.


எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர் மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சருக்குத் தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.