Skip to main content

“பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

minister udhayanidhi stalin talk about eps and ops

 

சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் கட்டப்பட்டிருந்த அண்ணா மாளிகையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அமைச்சர் உதயநிதி நடத்தி வைத்தார். மேலும் அவர்களுக்கு திருமண சீர் வரிசைகளையும் வழங்கினார். 

 

அதன்பிறகு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி, “பொதுவாக இதுபோன்ற திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது, ‘கருணாநிதியும் தமிழும் போல...’ ‘மு.க.ஸ்டாலினும் உழைப்பும் போல...’ மணமக்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது. பெண்களிடம் அரசியல் பேசாமல் போகவே முடியாது. தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று அனைவருக்குமே நன்றாக தெரியும். எனவே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல வாழக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது வேண்டுமோ அதைக் கேட்டு பெற்றிடுங்கள்.

 

நான் சட்டசபையில் கூட பேசியிருந்தேன். ''எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஓ.பன்னீர்செல்வம் அவர்களே... நீங்கள் தவறுதலாக எனது காரில் ஏறிவிட்டீர்கள். எங்கள் காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள். நான் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டேன். ஆனால் கமலாலயம் மட்டும் செல்லவேண்டாம்'' என்று பேசினேன். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எழுந்து 'எந்த காலத்திலும் எங்கள் கார் அங்கே போகாது' என்றார். ஆனால் 2 பேரும் கமலாலயத்துக்கு போட்டிப்போட்டு சென்று 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்? இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.