
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.
இதன் பின் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் முறையாக கேலோ ஒலிம்பியாட் போட்டி அடுத்தாண்டு நடைபெற உள்ளது. நேற்று சாய்-இல் (SAI - Sports Authority of India) இருந்து அதிகரிகள் ஆய்வுக்காக வந்திருந்தார்கள். அடுத்த வாரம் மீண்டும் அதிகாரிகள் வர இருக்கிறார்கள். இங்கிருக்கும் வசதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு இந்த வாய்ப்பை வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் மத்திய அரசுக்கும் நன்றிகள். செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது போல் ஹாக்கி ஆசியக் கோப்பையையும் நடத்த இருக்கிறோம். அதற்கான பணிகளும் நடந்த வண்ணம் உள்ளது. அதுபோல் கேலோ இந்தியாவும் நல்ல முறையில் நடக்கும்.
பிரதமர் கேலோ இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். நாங்களும் கண்டிப்பாக அழைப்போம். தமிழ்நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் நடத்தலாம் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சென்னையில் மட்டும் நடத்தலாமா அல்லது மதுரை, கோவை என மூன்று, நான்கு இடங்களில் நடத்தலாமா என்று ஆய்வு செய்கிறார்கள். முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று தான் நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளின் மூலம் அது முடிவு செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, “தகவல் எங்கிருந்து வந்தது. எனக்கு வராத தகவல் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது. எங்கிருந்து இந்த தகவல் வந்தது என தெரியவில்லை. நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என்றும் தெரியவில்லை” என தெரிவித்தார்.