Skip to main content

"எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான், அவர் அப்படித்தான் பேசுவார்" - அமைச்சர் கே.என்.நேரு

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

minister talks about edapadi palanisamy at ob fair mela in trichy

 

திருச்சி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் ஆகியன இணைந்து நேற்று நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான பிரத்தியேக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 19 நிறுவனங்கள் திருச்சியை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர். இதில் முதற்கட்டமாக 15 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

தமிழகத்தில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையில், "தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாகப் பேசி வருகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று எங்களைப் போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தவில்லை. நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம். எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான். அவர் அப்படித்தான் பேசுவார்" எனக் கூறினார்.

 

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Former Minister MR. Vijayabaskar sentenced to court custody

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதனால் தொடர்ந்து தலைமறைவாக  இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்.  மேலும் இது தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வந்தனர். 

Former Minister MR. Vijayabaskar sentenced to court custody

அதனைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இத்தகைய சூழலில் தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு சுமார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற  நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். அதோடு சார்பதிவாளரை  மிரட்டிய வழக்கில் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

The website encountered an unexpected error. Please try again later.