Skip to main content

“உடல் உறுப்பு தானம் மூலம் வடிவேல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்” - அரசு மரியாதை செலுத்திய அமைச்சர் 

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Minister M. Subramanian pays tribute to organ donor in Theni

 

உடல் உறுப்பு தானம் அளிப்பவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை கொடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான்,  தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர்  சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரின் உடல் உறுப்புகளைக் குடும்பத்தினர் தானம் அளித்துள்ளனர். அவரின் உடல் உறுப்புகள் 6 பேரின் உயிரைக் காப்பாற்ற பயன்படுத்த இருக்கிறது. 

 

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடிவேல் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். அதோடு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேனி வடக்கு மாவட்டச் செயலாளர்  தங்கதமிழ் செல்வன். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அதோடு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்கள்.                  

 

இது சம்பந்தமாக வடிவேலின் தந்தை தனசேகரப்பாண்டியனிடம் கேட்டபோது, “நான் வீட்டில் துணி வாங்கி தைத்து மேகமலை எஸ்டேட் பகுதி தொழிலாளர்களுக்கு துணி வியாபாரம் செய்து வந்தேன். அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு மனைவி மற்றும் மகள், மகனை வளர்த்தேன். இந்நிலையில்  எனக்கு  திடீரென ஏற்பட்ட நோய் பாதிப்பினால் கண் பார்வை போனது. பல்வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்தபோதும் பார்வை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என் மனைவி கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். சாப்பாட்டுக்கே வழியில்லாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருந்த குடும்ப வறுமையைக் கண்ட மகன் வடிவேல் சிறுவயதில் கட்டட வேலைக்குச் சென்று கல், மண் சுமந்தான். அதில் கிடைக்கும் வருமானத்தை வீட்டில் வந்து கொடுப்பான். 

 

சின்னமன்னூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். அங்கு ஒரு தோப்புக்கு நடுவே இருந்த குடிசை வீட்டில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ., வரை படித்தான். பிறகு அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகினான். இதற்கிடையே அவனுடைய சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு கொண்டிருந்தபோதே, மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதையும் அவன் சிரமப்பட்டு, திருமணத்தை நடத்தினான். அதன்பிறகு கோவையில் நடந்த அரசு போட்டித் தேர்வு எழுதினான். அந்தத் தேர்வில் வென்று முதல் பணி போடியிலும், பிறகு உத்தமபாளையத்திலும் பார்த்தான். அதன் பிறகு தான் தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தான்.

 

அரசுப் பணிக்கு சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிறது. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவு. அதையும் லோன் போட்டு கடந்த ஆண்டு தான் கட்டி முடித்தான். அந்த வீட்டில் முழுதாக ஓராண்டு கூட இல்லாமல் போய் விட்டான். திருமணம் முடிந்து மருமகள் பட்டுலட்சுமியையும் படிக்க வைத்து தேனி மாவட்ட நீதிமன்றத்தில் கிளார்க் வேலைக்குச் சேர்த்தான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், எல்.கே.ஜி படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். அப்பா இறந்தது கூட தெரியாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். எனக்கு கண் பார்வை போய் 30 வருடங்கள் ஆகிவிட்டதால்  வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகிறேன். என் ஒரு கண் பார்வையாவது அரசு சரி செய்து கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

இது சம்பந்தமாக வடிவேல் உறவினர்கள் சிலரிடம்  கேட்டபோது, “கடந்த வெள்ளிக்கிழமை வேலை முடிந்து தேனி கலெக்டர் ஆபிஸிலிருந்து வீடு திரும்பியுள்ளார். டூவிலரில் சீலையம்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது ரோட்டை திடீரென மாடு ஒன்று கடந்துள்ளது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். ஹெல்மேட் கிளிப்பை மாட்டவில்லை. இதனால் ஹெல்மேட் கழன்று விழுந்துள்ளது. தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்ததை முடிவு செய்து கூறிய பிறகு எங்க குடும்பத்தினருடன் பேசி மண்ணுக்கு போற உடம்பு தானே உடல் உறுப்புகளை தானம் கொடுத்து நாலு பேர் பிழைத்து வாழ்ந்தா சந்தோஷம் தானே என நினைத்து உடல் உறுப்பு தானத்துக்கு அனுமதி கொடுத்தோம். அதன் மூலம் எங்க வடிவேல் உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்” என்று கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்