Skip to main content

“புத்தக விற்பனையாளர்களை வாழவையுங்கள்” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக விருதுநகர்  மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் நவம்பர் 17 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் மொத்தம் 11 நாட்கள் புத்தகத் திருவிழாவை நடத்துகின்றனர்.

 

விருதுநகரின் முதலாவது புத்தகத் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் துவக்கி வைத்தனர். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

 

இத்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி, தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி, சிறுவர்கள் விளையாட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுப் பகுதி மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 

புத்தகத் திருவிழா துவக்க நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என வாய்மொழியாகச் சொல்லாமல் தமிழ்நாடு அரசு ஆணையே பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கும், மக்களுக்கும் புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். புத்தகத்தின் மீதான எனது பார்வை என்னவெனில், நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடையை அணியலாம். புதிய ஆடைகளைக் கூட அணியலாம். ஆனால், நமது தாயின் பழைய சேலையில் இருந்து வரும் வாசம் எவ்வளவு பெருமை வாய்ந்த வாசமாக இருக்குமோ, அதைப்போல்தான் புத்தகங்களும். அது என்றென்றும் மனம் வீசியபடியே இருக்கும்” என்று  பேசினார்.  

 

minister kkssr ramachandiran spoke at the book festival virudhunagar

 

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோ “அந்தக்காலத்துல கூட்டுக் குடும்பங்களா வாழ்ந்து வந்தோம். ஒருத்தர ஒருத்தர் கண்காணிச்சோம். இப்ப எப்படின்னா... ஒவ்வொருத்தருக்கும் தனி அறை இருக்கு.  கதவைப் பூட்டிக்கிட்டு செல்போனே கதின்னு கிடக்குறாங்க. இந்த உலகத்தை விட்டு வேற உலகத்துக்கு போயிடறாங்க. குடும்ப உறவுகளையும் மறந்துடறாங்க. முன்னால எல்லாம் பக்கத்து வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் நண்பனா இருந்தான். இன்னைக்கு பலரும் முகநூல்ல நண்பர்கள் வச்சிருக்காங்க. இந்த நிலையை மாற்ற புத்தகங்களால் மட்டுமே முடியும். நமது சரித்திரம் என்ன? தமிழன் யார்? நமது பெருமை என்ன? புத்தகங்களைப் படித்தால்தான் இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். புத்தக விற்பனையாளர்களை வாழவையுங்க. அவங்க இல்லைன்னா... நமக்கு சரித்திரமே தெரியாமப் போயிரும்.” என்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் பேசினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெயில்ல தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா!”-சுடச்சுட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிரச்சாரம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 "Don't get too hot!"- Minister K.K.S.S.R. Propaganda

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்தியா கூட்டணியின்  காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரப்புரை செய்தார்.  

அப்போது பேசிய அவர், “உங்களைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கோம். நீங்க யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? எங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறீங்க. நாங்க உங்கள பார்க்காம இருந்தோம்னு வச்சிக்கங்க.. வைவீக. இந்தப் பயலுகளுக்கு எவ்வளவு மப்பு இருந்தா ஓட்டு கேட்க கூட வரலைன்னு வைவீக. அதுக்காகத்தான்.. மாணிக்கம்.. கொஞ்சம் வெயிலா இருந்தாலும் பரவாயில்லன்னு கூட்டிட்டு வந்திருக்கேன்.  தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா. எல்லாரும் பார்த்தீங்கன்னா நம்ம சொந்தங்கதான். பார்க்காதவங்க கிடையாது. சாத்தூர்ல இருக்கிற அத்தனை பேரும் எனக்கு சொந்தக்காரங்கதான். சொந்தங்கள் என்ற உரிமையில்தான் உங்ககிட்ட ஓட்டு கேட்க வந்திருக்கோம். உங்களுக்கு வேண்டியது எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறோம். எல்லாரும் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க” என்று வாக்கு சேகரித்தார். 

Next Story

துரை வைகோ சொன்ன குட்டி ஸ்டோரி; விருதுநகர் நிகழ்ச்சியில் நடந்த சுவாரசியம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 The short story told by Durai Vaiko; the minister answered on the stage!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அமைந்துள்ளது விஸ்வநத்தம் கிராமம். இப்பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாகப் பயனற்று நில மாசுபாட்டை ஏற்படுத்தி வந்தது. இதையறிந்த விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள், குப்பை மேடாகப் பயனற்றுக் கிடந்த அரசு நிலத்தை மீட்டு குறுங்காடு அமைக்கத் திட்டமிட்டனர். விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடம் வேலை செய்யும் எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி அரசிடம் அனுமதி கேட்டு பணிகளைத் துவங்க வேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் பணியைப் பார்த்து பாராட்டிவிட்டு தனிப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்துவிட்டுச் சென்ற மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் ஞாபகம் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கு வந்துள்ளது. உடனே அவர்கள் செல்போனில் தகவல் தெரிவித்து குறுங்காடுகள் அமைக்க உதவி கேட்க, பணிகள் தொடங்க அனைத்து உதவிகளையும் துரை வைகோ ஃபோன் மூலமே செய்து கொடுத்துள்ளார். செல்போனில் குறுங்காடு அமைக்கும் குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, உடனே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் கொடுக்க அமைச்சரும் தமிழக அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, குறுங்காடு அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஊராட்சி தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த கூட்டு முயற்சியால் முதற்கட்டமாக விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மரக் கன்றுகளை நட்டு நிகழ்வினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக குறுங்காட்டிற்கு 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட  முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக LED திரையில் திரையிடப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய  துரை வைகோ, 'விதைப்பது ஒரு முறை வாழட்டும் தலைமுறை' குறுங்காடு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, குறுங்காட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டு மரங்கள் நட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 14 மாதங்களில் தான் கொடுத்த வாக்கை செய்து காட்டிய பின்னணியை தனது கட்சியின் தலைவரும் தந்தையுமான வைகோவை முன்னிறுத்தி திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பேசினார். மேடையில், அண்ணன் தங்கம் தென்னரசு என அழைத்து, இருவருக்கும் 2 தலைமுறையாக இருக்கும் உறவு பந்தத்தை எடுத்துக்காட்டி பேசினார். தொடர்ந்து பேசியவர், ''நான் நல்லா இருக்கணும் என எப்போதும் நினைக்கிறது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அமைச்சர் தங்கம் தென்னரசு..'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து உணர்வுப்பூர்வமாக பேசிய  துரை வைகோ, குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் வாங்க சென்றதாகவும், அப்போது அன்புடன் பேசிய அமைச்சர், ''உங்க அப்பா தான் புலி புலினு இருந்தார்னா.. நீ மரம் செடி கொடின்னு இருக்கியே.. சீட்டு வாங்கி அரசியல் வேலை பாரு..'' என அன்புடன் கடிந்துகொண்டதாகவும், அதற்கு ''நான் இல்லாத காலத்திலும் இதை அமைத்துத் தந்தவன் வைகோ மகன். அவனது கட்சி என்பார்கள். அதுவே போதும். இந்த 32 ஏக்கர் குறுங்காடு எனது சின்ன உதவி..'' என சொல்லியதாக எல்லோர் மத்தியிலும் இருவருக்குள் நடந்த நிகழ்வை கூறினார். 

நிகழ்வில் இருந்த பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு பேசியவர், ''தான் அரசியலில் போட்டியிட இங்கு வரவில்லை..'' எனத் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து தனது உரையின் முடிவில் பேசியவர், தமிழக அரசின் பசுமைத் திட்டம் பற்றியும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் விஸ்வ வனம் அமைப்பை பற்றியும் பெருமிதத்துடன் பேசினார். இறுதி வரியாக, ''உங்களுக்கு ஊர் பிடிக்கலன்னா வேற ஊர் போய்டலாம். மாநிலம், நாடு புடிக்கலன்னா வேற இடம் போயிடலாம். ஆனா நம்ம பூமித்தாய விட்டு நம்ம எங்கேயும் போக முடியாது. ஒன்று சேர்ந்து பூமியை பாதுகாப்போம்..'' என சூளுரைத்து தனது உரையை துரை வைகோ முடித்துக்கொண்டார்.

இதையடுத்து, பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "துரை வைகோவை அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான். அவர் தற்போது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார். வைகோவிடம், `உங்களுக்கு பின்பு இந்தக் கட்சியை வழி நடத்த ஒரு ஆள் தேவை. அதற்கு துரை வைகோ பொருத்தமானவர். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..’ எனக் கூறி அரசியலுக்கு சம்மதம் தெரிவிக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் பேசினார். தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டி பேசினார். இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டின் பேரில் குறுங்காடுகள் அமைப்பதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.