ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள மயிலம்பாடியில், ரூ.26 கோடி மதிப்பிலான அரசின் அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டும் பணியினை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், 11ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர், அமராவதி ஆற்றில் சாயச் சலவை ஆலைகளின் கழிவுகள் கலப்பது இல்லை. இருப்பினும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம், அமராவதி ஆற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார். மேலும் கூறும்போது, "கரூர் மாவட்ட அமராவதி ஆற்றின் கரையில், சாயச் சலவை ஆலைகள் செயல்படவில்லை. கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து சாயச் சலவை ஆலைகளும் கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன்தான் செயல்படுகிறது. இருப்பினும் அமராவதி ஆற்றில் சாயச் சலவை ஆலைகள் கலப்பது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்" என்றார்.
செய்தியாளர்கள், "மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்பதற்குப் பதிலாக, மாசுபடுத்தும் வாரியம் என அழைக்கலாமா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளதே" எனக் கேட்ட கேள்விக்கு, “அது அவர்களின் கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்" என்றார். மேலும், அவரிடம் "உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீர்நிலைகளில், மாசு ஏற்படுத்துபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளதே?" என்று செய்தியாளர் கேட்டதற்கு, "பெரிய அளவில் மாசு ஏற்படுத்தும் நிலை, தற்போது இல்லை. அவ்வாறு வரும் காலங்களில் அதுகுறித்துப் பார்க்கலாம்" என்றார்.
திறந்த வெளி நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை "மாசு ஏற்படுத்தும் வாரியம். அதில் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது" என முகத்தில் ஒங்கி அடித்தது போல் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதற்கு அந்தத் துறையின் அமைச்சரான கருப்பணன், நீதிபதிகள் கருத்துத் தனிப்பட்ட அவர்களின் கருத்து எனக் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.