minister i periyasamy opended mullai periyar dam

Advertisment

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல் போகச் சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 130 அடிக்குக் குறையாமல் இருந்ததால், முதல்போக விவசாயத்திற்கு ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள், முதல்வருக்குக் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போகப் பாசனத்திற்காக இன்று (1.6.2022) முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று (1.6.2022) முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக இருந்த நிலையில், தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் இன்று (1.6.2022) காலை 10.30 மணியளவில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஷட்டரை இயக்கி, வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டார். தேனி கலெக்டர் முரளீதரன், எஸ்பி பிரவின் மகேஷ் டோங்கரே, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜன், தேனி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்கத்தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமிழக விவசாயிகள் ஆகியோர் தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

Advertisment

அமைச்சர் ஐ.பெரியசாமி இதுகுறித்து கூறுகையில், "பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் விவசாயத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும், தேனி மாவட்ட குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களை நடவு செய்து தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.