Skip to main content

மணியம்மை குறித்த பேச்சு; வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Minister Duraimurugan regretted the speech on maniammai

 

கடந்த 17 ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் இயல்பாக கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

 

முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசும்போது, “திமுக பிறந்ததற்கு வேலூர் காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் திமுக பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது. திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊர் வேலூருக்கு வந்தார். மணியம்மையை பார்த்தார்.. கூட்டிகிட்டுப் போய்ட்டார்.. அவர் தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறந்த அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை விட்டார். கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது. ஆக, வேலூரில் இருக்கிற மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது” என்று பேசினார். இதனை சிலர் பெரியார் மணியம்மையை  கூட்டிகிட்டுப் போய்ட்டார் என்று கூறியது மணியம்மை ஆதரவாளர்களை புண்படுத்திவிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். தேவையற்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துகொள்கிறேன். பெரியார் மணியம்மையை அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு பதில் கூட்டிகொண்டு போனார் என பேசிவிட்டேன். இரு சொற்களுக்கும் இடையே மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன். தந்தை பெரியார், மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்டவர்களுக்கு என்பேச்சு வருத்தம் தந்திருக்கிறது. தந்தை பெரியார் இடத்தில் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணி அறிவார்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; ஆட்டோவில் வந்தது யார்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

Tearing down notice pasted at Jaber Sadiq's house; Police investigation

அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சாந்தோம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த புதன்கிழமை வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதோடு, வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு சென்றிருந்தனர். இப்பொழுது வரை ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த ஜாபர் சாதிக்கின் தாயார் உறவினர் ஒருவருடன் வந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்தெறிந்ததோடு, வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் வந்த ஆட்டோ எண் மற்றும் அவருடன் வந்த உறவினர் யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

'தமிழக மக்கள் மோடியை வஞ்சிக்க தயார்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
MODI

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  ‘நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை'' என பேசியிருந்தார்.

'Tamil people are ready to deceive Modi'- Minister Shekharbabu interview

இந்தநிலையில் சென்னையில் நடந்த 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நரேந்திர மோடி அவருடைய கட்சி நோட்டாவிற்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு வரையில் இது ஆறாவது முறையாக தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வந்து கொண்டிருக்கின்றார். யாருக்கு வயிற்றில் புளியை கரைத்து கட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறாரோ? அவருக்கு தான் திமுகவும்,  திராவிட மாடல் ஆட்சியும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுடைய கருத்து. நம்மிடம் இருந்து பெறப்படுகின்ற வரியில் இருந்து அவர்கள் திரும்பி கொடுக்கும் சதவிகிதத்தை பார்த்தால் நாம் அளிக்கிறது 100 என்றால், 25 சதவீதம் அளவிற்குதான் அவர்கள் திரும்பி நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி அவர்களை பார்த்து கேட்பது என்னவென்றால் இத்தனை முறை வருகின்ற பிரதமர் வெள்ளத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர் தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாப நோக்கத்திற்காகத்தானே?  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்காமல் வஞ்சிக்கின்ற பிரதமரை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.