Skip to main content

மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி அமைச்சர் ஆறுதல்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Minister comforts the family of the girl who passed away due to lightning

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்த கோபு சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வித்யா (31), மகள் பவ்யாஸ்ரீ (2). இருவரையும் ஊரில் விட்டுவிட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

கடந்த வாரம் வித்யா உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று மாலை வீடு திரும்பியவர் மழை வரும் போல் இருந்ததால் வீட்டு வாசலில் கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருந்த போது திடீரென அருகில் நின்ற புளிய மரத்தில் தாக்கிய மி்ன்னல் வித்யாவையும் தாக்கி உடலையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் கருக்கியது. அக்கம்பக்கத்தினர் வித்யாவை மருததுவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியும் பயனில்லை. மின்னல் தாக்கிய வேகத்திலேயே உயிர் போய்விட்டிருந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கிய நிலையில் சிங்கப்பூரில் இருந்த கணவர் கோபுவும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். 2 வயது கைக்குழந்தையோடு கண்ணீர் மல்க நிவாரணக் காசோலையைப் பெற்றுக்கொண்ட கோபு பேச முடியாமல் குமுறியது அனைவரையும் கரைய வைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்