சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (55). டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவந்தார். இது தொடர்பாக அடிக்கடி வழக்குகளில் கைதாவதும், சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், மீண்டும் அதேபோல் கள்ளச்சந்தையில் மது விற்பதுமாக இருந்து வருகிறார்.
இவருடைய வீட்டில் மினி டாஸ்மாக் கடையே நடத்தப்படுவதாக சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு அவருடைய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில், வீட்டுக்குள் அட்டைப் பெட்டிகளிலும், சாக்குப்பைகளிலும் ஏராளமான மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவருடைய வீட்டில் இருந்து மொத்தம் 2,174 மதுபாட்டில்கள் மற்றும் மதுபானம் விற்ற 77 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
வீட்டுக்குள் சட்ட விரோதமாக மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மாதேஷ், அவருடைய மகன் கண்ணன் (42) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் விசாரணையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஏப். 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மதேஷும், அவருடைய மகனும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.