தென்காசி மாவட்டத்தின் கீழக்கடையம் பகுதியில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹெவி டைப் டாரஸ் லாரிகளில் அளவுக்கதிகமான டன் எடை கொண்டவை அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தவிர விதிகளுக்கு முரணாக அளவுக்கதிகமான அளவு கனிம கற்கள் தோண்டி எடுக்கப்படுவதால் குவாரிகளைச் சுற்றியுள்ள கீழக்கடையம் ஏரியாவின் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு விவசாயம் சீர்கேடாகியுள்ளது.
அத்துடன் அளவுக்கு அதிகமான அளவு லோடுகள் ஏற்றப்படுவதால் கீழக்கடையம் ரயில்வே சாலை சீர் கெட்டதுடன் நகரின் பொதுமக்களின் போக்குவரத்தும் இந்த கனிம லாரிகளால் கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிப்பை உணர்ந்த பொதுமக்கள் ஊராட்சித் தலைவரான பூமிநாத் மற்றும் கடையம் பஞ்சாயத்து யூனியனின் கூட்டமைப்பு தலைவர்களுடன் இணைந்து ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பிப்.17 அன்று தலைவர் பூமிநாத் தலைமையில் கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கனிமங்களை ஏற்றி வந்த லாரியை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கவே சம்பவ இடம் வந்த எஸ்.ஐ. முப்பிடாதி உள்ளிட்ட போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கனிம லாரியை விடுவித்திருக்கிறார்கள். அதன்பிறகும் நடவடிக்கை இன்றிப் போகவே... கனிமக் கொள்ளையும் தொடர்ந்திருக்கிறது. இதனால் ஆத்திரமாகிப் போன பொதுமக்கள், பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கனிம லாரிகள் போகாதபடி கீழக்கடையம் ரயில்வே சாலையில் மிகப் பெரிய பள்ளம் தோண்டிவிட்டனர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
விதிக்கு முரணாக அளவுக்கதிகமாக கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுவதால் நீர் ஆதாரம் வற்றிப் போய் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரவு பகல் கணக்கில்லாமல் லாரிகளில் கனிமங்கள் வெளியேற்றப்படுவதால் சாலையும் சீர் கெட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகளே துணை போவதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார் ஊராட்சித் தலைவரான பூமிநாத். தொடர்புடைய காவல் சரகத்தின் மூன்று ஸ்டார் அதிகாரி கனிவும் கருணையும் காட்டுவதால் தான் கனிம லாரிகள் தடையின்றிப் பறக்கின்றன. எனவே அரசு தலையிட வேண்டும் என்கிறார்கள் கீழக்கடையம் வாசிகள்.