Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mikjam storm damage; Funded by actor Sivakarthikeyan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் தொடரும் போராட்டம்; ‘அமரன்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Tamil Nadu staged a road blockade to ban the movie Amaran

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Story

அமைச்சர் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய சி.ஐ.எஸ்.எஃப் வீரர்; கொதித்த தொண்டர்கள் 

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
CISF soldier who hugged Minister Muthusamy at the airport

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டார். பின்னர், அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு, மும்பை செல்வதற்காக, பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, கோவையில் இருந்து அவர் விமானம் மூலம் கிளம்பினார். அப்போது, அவரை வழியனுப்ப கோவை விமான நிலையத்திற்கு வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி வந்தார். 

முன்னதாக, கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் உதயநிதியை காணக் குவிந்திருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது, அவரை மட்டும் உள்ளே செல்ல மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். உடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அனுமதிக்க முடியாது என அனுமதி மறுத்துவிட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், அமைச்சர் முத்துசாமியை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் அவரது நெஞ்சில் கைவைத்து தடுத்து தள்ளிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த திமுக தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவர் அமைச்சர் எனத் தெரியவில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. அப்பொழுது, அமைச்சர் யார் என்று கூடத் தெரியாமல் பாதுகாப்புப் பணிக்கு எப்படி வருகிறார்கள் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில்  பரபரப்பான சூழல் நிலவியது. 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி விமான நிலையத்திற்குள் சென்று உதயநிதி ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துத் திரும்பினார். பின்னர், சம்பவம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, பாதுகாப்பு கருதிதான் CISF வீரர்கள் அப்படி செய்தார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம். பாதுகாப்பு படையினர் சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டனர் எனவும் அதே சமயம் பாதுகாப்பு என்பது முக்கியம் என்பதால் தான் அதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். அதே சமயம். இதை அவர்கள் வேண்டுமென்றே செஞ்சிருந்தா எங்களது ஆக்‌ஷனும் வேறு மாதிரி இருந்திருக்கும் எனக் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அமைச்சர் முத்துசாமியின் முதிர்ச்சியான பதிலால் இந்த பிரச்சனை பெரிதாகாமல் பேசித் தீர்க்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.