Skip to main content

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகத்தைத் தானமாக அளித்த லீலாவதி காலமானார்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

mgr brother daughter passed away in chennai



மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி (வயது 72). உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (26/11/2021) அதிகாலை 02.00 மணியளவில் உயிரிழந்தார். மறைந்த லீலாவதி தனது சித்தப்பாவான எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

லீலாவதி மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர். அதேபோல், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

 

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.