Skip to main content

ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில்; ஆய்வு அறிக்கையை தயாரிக்க ஒப்பந்தம்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Metro Rail between Hosur - Pommachandra; Contract to prepare the inspection report!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம் பாலாஜி ரயில்ரோட் சிஸ்டம்ஸ் மற்றும் ஹபோக் கன்சல்டன்ட்ஸ் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.29.44 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை மொத்தம் தோராயமாக 20 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 8 கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. என இருமாநிலங்களுக்கு இடையே விரைவான போக்குவரத்து அமைப்பாக இருக்கும்.

பல்வேறு போக்குவரத்து நெரிசல் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வது, தற்போதுள்ள பயண தேவை மாதிரியை புதுப்பித்தல், 30 ஆண்டு காலத்திற்கான பயணத் தேவையை 5 ஆண்டு இடைவெளியில் கணித்தல் மற்றும் முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுதல் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், மற்றும் திட்ட இயக்குநர் த.அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் ராஜ்குமார், ஹபோக் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.பி.கோபால்குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் டி.ஜெபசெல்வின் கிளாட்சன், (ஒப்பந்த மேலாண்மை மற்றும் ஒப்பந்த கொள்முதல்), ஆர்.ரங்கநாதன், (கட்டுமானம்) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்