தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள், கூலிப்படையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இதனால் திருச்சி சாமிரவி உட்பட பல ரவுடிகள் தாங்களாகவே முன்வந்து ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி ரவுடி துரை கடந்த மாதம் புதுக்கோட்டையில் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்த சில நாளில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சென்னையில் சுடப்பட்ட சம்பவமும் ரவுடிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் வழுக்கி விழுந்து கை, கால்கள் உடைந்து சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த 5 ந் தேதி முதல் சந்தேகப்படும் விதமாக 5 பேர் தங்கி இருப்பதாக புதுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு செய்து சோதனை செய்தனர். அரிவாள்கள், பெட்ரோல் குண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் பாலிதீன் பைகளுடன் 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பழைய பிரபல ரவுடியின் ஆட்கள் என்று கூறியுள்ளனர்.
மேலும் நடந்த விசாரணையில், அந்த விடுதியில் தங்கி இருந்தது கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாதம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் ஜெயப்பிரகாஷ் (26), கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மலவராயன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டபிரபு (29), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மாடசாமி மகன் சுரேஷ் (எ) சுரேஷ் பாண்டியன் (23), திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த விஜயராகவன் மகன் மகாதேவன் (32), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் இசக்கி பாண்டியன் (24) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சம்பவத்திற்காக வந்து தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல இவர்களுக்கு உதவியதாக மேலும் சிலரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர் ரவுடிகள் யாரேனும் புதுக்கோட்டையில் பதுங்கி இருப்பது தெரிந்து அவர்களை கொல்ல இந்த கூலிப்படையினர் ஆயுதங்களுடன் வந்துள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.