Skip to main content

மெகா கடத்தல்... கடத்தல்காரனாக மாறிய மாஜி அமைச்சரின் மகன்!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரிலிருக்கும் தனியார் முந்திரி ஆலையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு கோடி 10 லட்சம் மதிப்புள்ள 16 டன் முந்திரிப்பருப்பு கண்டெய்னர் லாரி மூலம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் நகரைச் சேர்ந்த ஹரி ஓட்டி வந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதுக்கோட்டை அருகிலுள்ள பொட்டலூரணிப் பக்கம் கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கண்டெய்னர் லாரியை வழிமறித்து டிரைவருடன் கடத்தினர்.

 

இச்சூழலில் ஜி.பி.எஸ். கருவி செயல்படாததாலும் டிரைவரின் செல் ஸ்விட்ச் ஆஃப்பிலிருந்தது கண்டு அதிர்ந்து போன லாரி புக்கிங் அலுவலக கணக்கர் முத்துக்குமார் புதுக்கோட்டை போலீசில் புகார் செய்ய, தகவலறிந்த எஸ்.பி.ஜெயகுமார் தூத்துக்குடி ரூரல் ஏ.எஸ்.பி. சந்தீஸ் தலைமையில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசாரைக் கொண்ட தனிப்படை அமைத்து லாரியை மீட்க உத்தரவிட்டார். ஜி.பி.எஸ். கருவி அகற்றப்பட்டதால் லாரியின் போக்குபற்றி அறிய முடியாமல் திகைத்தது தனிப்படை. இதில் சிக்கல் ஏற்படவே சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் லாரி நாமக்கல் நோக்கி செல்வதையறிந்த தனிப்படையினர் அதனை விரட்டினர்.

 

போலீஸ் பின் தொடர்வதையறிந்த கண்டெய்னர் கடத்தல் கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பக்கமுள்ள காக்கநேரி என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டுத் தப்பியோடினர். அங்கு வந்த தனிப்படையினர் லாரியை மீட்டனர். இதனிடையே நாமக்கல் மாவட்ட எல்லையான திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரை அம்மாவட்டப் போலீசார் மடக்கி அதிலிருந்தவர்களை விசாரித்திருக்கின்றனர். அவர்களின் முரண்பாடான தகவலால், போலீஸ் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் 2வது மகனான ஞானராஜ் ஜெபசிங், விஷ்ணு பெருமாள், முள்ளக்காடு பாண்டி, கணபதி மாரிமுத்து, மட்டக்கடையின் மனோகரன், முறப்பநாடு செந்தில்முருகன், பாளை ராஜ்குமார் என்பது தெரியவந்திருக்கிறது. இவர்கள் லாரி டிரைவரைத் தாக்கி அவரைக் காரில் ஏற்றியும், கண்டெய்னர் லாரியை கடத்தியதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் சம்பவம் நடந்த இடம் தூத்துக்குடியின் புதுக்கோட்டை லிமிட் என்பதால் நாமக்கல்  மாவட்டப் போலீசார் அவர்களை காருடன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

கண்டெய்னர் லாரி கடத்தப்பட்ட ஏழு மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு 7 பேரையும் கைது செய்த தனிப்படையை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டினார்.

 

இதனிடையே தனது குடும்பத்திற்கும் தன் மகன் ஜெபசிங்கிற்கு ஏற்கனவே தொடர்பு கிடையாது என்பதற்கான ஆவணங்களைப் போலீசாரிடம் காட்டியிருக்கிறாராம் மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன். முன்னாள் அமைச்சரின் மகன் கடத்தல் காரனாக மாறியது உப்பு நகரைப் பரபரப்பாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

மறைந்த முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உடலுக்கு முதல்வர் அஞ்சலி! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
CM Tributes to Late Former Minister Indira Kumari

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்து வந்தவர் இந்திரகுமாரி (வயது 73). அப்போது தொட்டில் குழந்தை திட்டம் உருவாக இவர் முக்கிய காரணமாக விளங்கினார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர். அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பின்பு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்திரகுமாரி, சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று (15.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே சமயம் இந்திரகுமாரி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM Tributes to Late Former Minister Indira Kumari

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மறைந்த இந்திரகுமாரியின் இல்லத்திற்கு இன்று (16.4.2024) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.