medical seats govt schools students madurai high court bench governor

Advertisment

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மீது திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புகிறோம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (29/10/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். கர்நாடகாவில் இதுபோல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? பல கட்ட ஆலோசனைக்கு பிறகே சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும். சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உருவாக்கிய மசோதாவுக்கு கூடுதல் காலம் கேட்பது விசித்திரமானது. இதுபோல் சூழல்கள் எழாது என்பதாலேயே ஆளுநருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என சட்டம் உள்ளது. சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது; அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை. நீதிபதிகள் பலர் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்ததாக சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்துள்ளனர். நீதிபதிகளை விமர்சிப்பது குறித்து அரசு தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், பிற மாநிலங்களில் என்ன நிலை உள்ளது என்பதை தெரிவிக்க அரசுக்கு பிற்பகல் வரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் 'கர்நாடகாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை' என விளக்கமளித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், 300 முதல் 400 வரை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க தேவையில்லை என விதிகள் உள்ளன. விதி 361-ன் படி ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

சமூக,பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வி பெறும் நிலையை வேலை செய்துகொண்டே வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இது குறித்து தரமற்ற முறையில் விமர்சிப்போருக்கு உண்மை விளங்கும். 7.5% உள் இடஒதுக்கீடு மசோதா மீது திங்கட்கிழமை நல்ல முடிவு தெரிய வரும் என நம்புகிறோம் என கூறிய நீதிபதிகள், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.