Skip to main content

மாஜி அமைச்சர் ரெய்டு வளையத்திற்குள் மருத்துவக்கல்லூரி நிர்வாகம்… சிக்குகிறதா ஆவணங்கள்?

 

 

Anti-corruption department raids C.Vijayabaskar's house too...!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிகளுக்கு முரணாக, தகுதிச் சான்று வழங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அந்த மருத்துவக் கல்லூரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் செயல்படுவதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தான், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டு. முதல் தகவல் அறிக்கையில், சி.விஜயபாஸ்கருடன், தனியார் மருத்துவக் கல்லூரியின் தாளாளர் ஐசரி கணேஷ், கல்லூரியின் டீன் ஸ்ரீநிவாசராஜ் மற்றும் தகுதிச் சான்று வழங்கிய குழுவில் இருந்த மருத்துவர்கள் பாலாஜிநாதன், மனோகர், சுஜாதா மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

 

இந்த மருத்துவக் கல்லூரிக்கு சான்று அளித்ததற்காக, கடந்த 2020- ஆம் ஆண்டில் பார்வையிட்ட குழுவினர், ரத்த வங்கி, அறுவைச் சிகிச்சை அரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதாக அறிக்கை அளித்தனர். ஆனால் இதே காலக்கட்டத்தில் மருத்துவமனை கட்டடத்தைக் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டது தெரிய வந்திருப்பதாகவும், இதன் மூலம் அடிப்படை வசதிகள் இல்லாத போதே சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Anti-corruption department raids C.Vijayabaskar's house too...!

 

லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த நவம்பர் மாதம் நடத்திய திடீர் ஆய்வில் மருத்துவமனைவியில் போதிய வசதிகள் இல்லை என்பது தெரிய வந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதிவேடுகளில் இருந்ததை விட குறைவான நோயாளிகளே சிகிச்சைப் பெற்று வந்ததும், தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

 

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

 

இதை படிக்காம போயிடாதீங்க !