Skip to main content

இந்துத்துத்துவா நெருக்குதலுக்கு அஞ்சுகிறாரா வைகோ?

கோவில்களுக்குச் செல்லும் இந்துக்களின் மனம் புண்படும்படி கேலி செய்யக்கூடாது. கோவிலுக்கு போக விருப்பம் இல்லாதவர்கள் கோவிலுக்கு போகாமல் இருக்கலாம். ஆனால், கோவிலுக்கு போகிறவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதை பலரும் பலவிதமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்.


வைகோ என்னவோ புதிதாக பேசியதைப் போல இந்த விஷயத்தை பூதாகரமாக்குகிறார்கள் என்றே திராவிட இயக்க கருத்தியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரை கும்பிடவும் மாட்டேன் என்ற நடைமுறை திமுகவில் பல காலமாக தொடர்கிறது. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமாக திமுக இருந்தாலும், மக்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கலைஞர் காலத்திலிருந்தே, திமுகவினரின் குடும்பத்தினர் கோவில்களுக்குப் போவது வாடிக்கையாக இருப்பதை காணமுடியும்.


இந்நிலையில்தான் வைகோவின் பேச்சுக்கு ஏன் முலாம் பூசப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அப்படி அவர் என்னதான் சொல்லிவிட்டார்? “மதுரை மீனாட்சி கோவிலுக்கும். திருப்பதி, சிதம்பரம் மற்றும் அத்திவரதருக்காக காஞ்சிபுரத்திற்கும் லட்சக்கணக்கான மக்கள் செல்கிறார்கள். நானும்கூட எனகு கிராமத்தில் உள்ள கோவிலை புனரமைத்துக் கொடுத்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது, கோவிலுக்கு செல்வோரை கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால், இதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஏற்க மாட்டார்” என்று வைகோ கூறியிருக்கிறார்.

mdmk party vaiko mp special discussion speech


திமுக நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணாவும்கூட காலத்திற்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார் வைகோ. சனாதனவாதிகளின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை தடுக்க இத்தகைய மாற்றம் அவசியம் என்றும் அவர் கூறினார். இதுவரை ஆலயம் செல்வோரை வைகோ வெளிப்படையாக கிண்டல் செய்ததில்லை. இந்நிலையில்தான் அவருடைய பேச்சு, திராவிட இயக்கத்தில் உள்ள இந்துக்களை பத்திரப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.


திராவிட இயக்கங்களை இந்துக்களுக்கு எதிரானவையாக காட்ட சங் பரிவாரங்கள் முயற்சி செய்வதால், இப்படி பேசும்படி வைகோ நிர்பந்தம் செய்யப்படுகிறார் என்ற கருத்தும் இருக்கிறது. ஏற்கெனவே, பாஜகவினர் திமுகவை இந்து விரோதக் கட்சி என்று கூறியதற்கு ஸ்டாலின் இதே தொனியில் பதில் அளித்திருக்கிறார். திமுக என்றும் இந்துக்களுக்கு எதிரானது அல்ல. கட்சியில் இருக்கும் 90 சதவீதம் உறுப்பினர்கள் இந்துக்கள்தான். இப்போதும் தனது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, திமுகவை இந்து விரோத கட்சியாக முத்திரை குத்த முயற்சி நடக்கிறது என்று ஸ்டாலின் பேசியிருந்தார்.
 

வைகோவின் இந்தப் பேச்சு திராவிட இயக்கத்தின் மையக்கருத்திலிருந்து விலகுவதாக இருக்கிறதா என்று திராவிட இயக்க வரலாற்று ஆசிரியர் க.திருநாவுக்கரசுவிடம் நிருபர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அளித்த பதில்…

mdmk party vaiko mp special discussion speech


“இப்படி பேசுவதற்கான எந்த சூழ்நிலையும் இல்லாத போது, வைகோ இதை தனது கட்சி பொதுக்குழுவில் விவாதித்திருக்க வேண்டும். பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கக் கூடாது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கின்றன. ஆளும் அதிமுகவோ பாஜக ஆதரவாக செயல்படுகிறது. பாஜகவோ தமிழ் விரோத கொள்கைகளை கடைப்பிடிக்கிறது. எனவே, திராவிடக் கட்சிகள் தங்கள் வியூகங்களை மாற்றவேண்டிய அழுத்தத்தில் இருக்கின்றன என்று யாரும் சொல்லமாட்டார்கள்” என்றார்.
 

விடுதலை ராஜேந்திரனின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது…
 

“ஆர்எஸ்எஸ்சும், சங் பரிவாரங்களும் திராவிட கட்சிகளை இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளன. எனவேதான் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். திராவிட கட்சிகள் எப்போதும் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானவை இல்லை. பெரும்பான்மை இந்துக்களின் சுயமரியாதைக்கும் கவுரவத்திற்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்படும் வேத மதத்திற்கு எதிராகத்தான் இருக்கின்றன. திராவிட இயக்கத் தலைவர்களை இந்து விரோதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கிறவர்கள்தான், பெரும்பான்மை இந்துக்களின் உரிமைகளை மறுக்கிறார்கள் என்பதையும், ஆலயங்களில் நுழைய விடாமல் தடுக்கிறவர்கள் என்பதையும், பிராமணர் அல்லாதோர் ஆலயங்களில் பூசாரிகள் ஆவதை தடுப்பவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.