Skip to main content

மயிலாடுதுறை மாவட்டம்...  நனவாகும் கால் நூற்றாண்டு கனவு!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகிறது. சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை 110வது விதியின்கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 30 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நான்காவது மாவட்டம், மயிலாடுதுறை.

mayiladuthurai


தஞ்சை மாவட்டம் ஒன்றாக இருந்தபோதே தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிர்வாக அமைப்புக்காக கீழத்தஞ்சை மாவட்டம், மேலத்தஞ்சை மாவட்டம் என இரண்டாகப் பிரித்து அவற்றுக்குத் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. கீழ(கிழக்கு)த் தஞ்சை மாவட்டத்திற்குட்பட்டது மயிலாடுதுறை. இதனை மாயூரம், மாயவரம் என்று மக்கள் அழைத்து வந்த நிலையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, ‘மயிலாடுதுறை’ என்கிற பழந்தமிழ்ப் பெயரைச் சூட்டினார். எனினும், ‘ஆயிரம் இருந்தாலும் மாயூரம் போல வருமா’ என்றபடி இன்னமும்கூட, ‘மாயூரத்துக்கு டிக்கெட் கொடுங்க’ என்கிற குரலைப் பேருந்துகளில் கேட்க முடியும்.


தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை அதிகப்படுத்தும் முயற்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. அதற்கு முன்பாக, காங்கிரஸ் ஆட்சியில் சேலத்திலிருந்து தர்மபுரி, கலைஞர் ஆட்சியில் திருச்சி-தஞ்சை  மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை என ஓரிரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் கோவையிலிருந்து ஈரோடு பெரியார் மாவட்டம், மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம், ராமநாதபுரத்திலிருந்து விருதுநகர் காமராஜர் மாவட்டம், சிவகங்கை பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

 

mayilai



அத்துடன், திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் திருவள்ளுவர் மாவட்டம், கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் ஆகிய தனி மாவட்டங்களும், வேலூரிலிருந்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்தையும், தஞ்சையிலிருந்து திருவாரூர் தில்லையாடி வள்ளியம்மை மாவட்டத்தையும் பிரிப்பதாக எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவை நிறைவேறுவதற்கு முன்பாக 1987ல் எம்.ஜி.ஆர்.  இறந்துவிட்டார். பின்னர் கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் புதிய மாவட்டங்கள் பிரிப்பது தொடர்ந்தன.


தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்ட தில்லையாடி வள்ளியம்மை மாவட்டம் என எம்.ஜி.ஆர் ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோதே அது சர்ச்சையானது. திருவாரூரை விட பெரிய நகரங்களான நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதி மக்களும் வணிகர்களும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் நகரத்தைத் தலைநகராகக் கொண்டே புதிய மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.


1989ல் 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தபோது தஞ்சை மாவட்டப் பிரிப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்தன. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் பிரமுகர்களுக்கிடையிலானப் போட்டியினால் கலைஞர் ஆட்சியில் தஞ்சை மாவட்டப் பிரிப்பு தொடர்பாக முடிவு எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், எம்.ஜி.ஆர். ஆட்சியில் திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்று பெயர்சூட்டியதை மாற்றி, அதற்கு காயிதே மில்லத் மாவட்டம் என்றும், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


1991-96 ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நாகையைத் தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் அண்ணா மாவட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட நாகை மாவட்டத்துக்கு காயிதே மில்லத் பெயர் வைக்கப்பட்டது. இப்படித் தலைவர்களின் பெயர்கள் டிரான்ஸ்பர் ஆகும் அரசியல் ஒருபுறம் நடக்க, புதிய மாவட்டத் தலைநகர்  தேர்வும் சர்ச்சையானது. அப்போதே, மயிலாடுதுறைவாசிகள் தங்கள் ஊரின் சிறப்பு, கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நிலவரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்கள் ஊரை மாவட்டத் தலைநகராக்க வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கைகள் வைத்தனர்.


1996-2001 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த கலைஞர், திருவாரூரைத் தலைநகராகக் கொண்ட ஏ.டி.பன்னீர்செல்வம் மாவட்டத்தை உருவாக்கினார். நீதிக்கட்சித் தலைவர் பெயரிலான இந்தப் புதிய மாவட்டம், ஏற்கனவே எதிர்பார்ப்பில் இருந்த மயிலாடுதுறைவாசிகளை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. நாகை மாவட்டத்திற்குட்பட்டிருந்த மயிலாடுதுறையின் நலன்களும் வளர்ச்சித் திட்டங்களும் ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக தங்களின் அதிருப்தியை வலியுறுத்தி வந்தனர். (மாவட்டங்கள்-போக்குவரத்துக் கழகங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டுவது சாதிரீதியான மோதல்களை உருவாக்கியதால் மாவட்டங்களின் தலைநகருடன் இணைந்திருந்த தலைவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, அந்தந்த ஊர் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படுகின்றன.
 

 

mayilai



பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர், தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி என புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதும் மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, மயிலாடுதுறை மாவட்டத்தின் கோரிக்கை வலுப்பெற்றது. அண்மையில், நாகையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும்போது, மயிலாடுதுறை மாவட்டம் பற்றி பரிசீலிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்தப் பரிசீலனை, மார்ச் 24ந் தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பாக நிறைவேறியது. தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை.


 

mayiladuthurai


 

கால் நூற்றாண்டு கால கனவு நனவாகும் தருணத்தில் கட்சி எல்லைகளைக் கடந்து மயிலாடுதுறை மக்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நன்றி தெரிவித்தனர். புதிய மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இனிமேல்தான் உருவாக்கப்படவேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் தற்போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை என 4 மாவட்டங்களாகப் பிரிந்திருப்பது அந்தந்தப் பகுதியில் வாழ்கிற மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதுடன், புதிய வசதிகளை உருவாக்கி அவர்களின் அலைச்சலையும் குறைக்கிறது.


இந்த 4 மாவட்டத் தலைநகர்களையும்விட, தொழில்வாய்ப்பிலும், வணிகத்திலும், பொருளாதார வசதியிலும் சற்று மேலோங்கியிருக்கும் கும்பகோணத்தை தலைநகராகக் கொண்ட மாவட்டம் பற்றிய நெடுநாள் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதிவாசிகளிடம் அதிகரித்துள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.