Skip to main content

நிஜ  ‘ஹீரோ’ ஆவாரா விஜய்? -ரசிகர் காட்சி ரௌத்திரம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021
master in sivakasi theater

 

1981-ல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸ் ஆனது. சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஹீரோ எப்படியெல்லாம் கொலை செய்கிறான் என்பதே கதை. பின்னாளில் ‘புரட்சி இயக்குநர்’ என்றழைக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படம் இது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் விஜயகாந்த் பெயரும்கூட விஜய்தான்.

 

அதே (தந்தை) எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதையில், (மகன்) விஜய் நடித்து  2002-ல் ரிலீஸான படம் தமிழன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மையப்படுத்தியே,  இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.  
தமிழன் க்ளைமாக்ஸில் ஹீரோ விஜய் பேசி பிரபலமான வசனம் இது -  
‘ஒரு இந்து கீதையை தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு இஸ்லாமியர் குரான் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒரு கிறிஸ்தவர் பைபிள் தெரிந்திருக்காரோ இல்லையோ,
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும்.’

 

நாற்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘சட்டம் ஒரு இருட்டறை’, 18 வருடங்களுக்கு முன் வெளிவந்த  ‘தமிழன்’ குறித்தெல்லாம் இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன? விஜய் நடிப்பில் இன்று ரிலீஸான ‘மாஸ்டர்’ திரைப்படம்தான்!

 

master in sivakasi theater

 

முன்பெல்லாம், முன் கூட்டியே சினிமா டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, தியேட்டர் முன்பாக ‘பிளாக்கில்’ விற்பார்கள். மாமூல் கிடைத்தாலும்கூட, அவ்வப்போது இந்த பிளாக் டிக்கெட் பேர்வழிகளை அடித்து இழுத்துக்கொண்டு போய், போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். அப்படியென்றால், கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்பது சட்ட விரோதம்தானே?

 

சிவகாசியில் ஒரு தியேட்டரில் ‘ரசிகர் ஷோ’ என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் அனைத்துக் காட்சிகளுக்கும், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.450 என, கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்தனர் சிலர். அந்த டிக்கெட்டுகள் விஜய்யின் ரசிகர் மன்றத்தின் மூலம் பெற்று விற்கப்படுகிறது எனக் கூறப்பட்டது. தமிழகத்தில், சட்டத்துக்கு மதிப்பளிக்கும் சில தியேட்டர்களைத் தவிர, பல தியேட்டர்களிலும் இந்த கட்டணக் கொள்ளை பகிரங்கமாகவே நடக்கிறது.

 

மதுரையோடு ஒப்பிடும்போது, மக்கள் தொகையில் சிவகாசி, பதினைந்தில் ஒரு பங்குதான்! மதுரை வெற்றி தியேட்டரில், மாஸ்டர் திரைப்படத்துக்கான கட்டணம் ரூ.190 மட்டுமே! மதுரை வெற்றி தியேட்டரின் தரத்தோடு சிவகாசி தியேட்டரை ஒப்பிடவே முடியாது. ஆனால், மதுரை வெற்றி தியேட்டரைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

master in sivakasi theater

 

திரையில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குக்கு விசிலடிக்கும் ரசிகர்களும் சரி.. இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி, முதல் நாளே சினிமா பார்க்கின்ற இந்தியக் குடிமகன்களும் சரி.. இந்திய அடிப்படைச் சட்டம் தெரியாதவர்களாக அல்லவா இருக்கின்றனர்!  

 

மாஸ் ஹீரோவான விஜய், கூடுதல் கட்டண விவகாரத்தைக் கையிலெடுத்து, முதலில் தன்னிடமிருந்தும், தனது ரசிகர்களிடமிருந்தும், மாற்றத்தைக் கொண்டுவந்தால், நிஜத்திலும் ஹீரோதான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.  

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.