/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ananth jain.jpg)
திருமணமான ஒரே மாதத்தில் புரோக்கருடன் தப்பிச்சென்ற இளம்பெண் கணவர் வீட்டில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். போலீசார் அவரைத்தேடி பூனாவிற்கு செல்கின்றனர்.
சென்னையில் 45 வயது வரை திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்த அடகுக் கடை அதிபருக்கு, அழகான பெண்ணை திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கர் ஒருவர், ஒரே மாதத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் அந்த பெண்ணை அழைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை கொண்டித்தோப்பில் அடகு கடை வைத்திருப்பவர் ஆனந்த் ஜெயின். 45 வயதான இவர் தனக்கு பெண் அமையாமல் திருமணம் தள்ளிப்போவதை எண்ணி மனம் வருந்திக்கொண்டிருந்த நிலையில், கொடுங்கையூரைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கர் அறிமுகமானார். அவர், பூனாவைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணின் புகைப்படத்தை ஆனந்த் ஜெயினுக்கு காட்டினார். பெண் அழகாக இருக்கிறது. தனக்கு பிடித்திருக்கிறது. திருமணத்திற்கு ஓகே என்று சொல்லிவிட்டார் ஆனந்த் ஜெயின். பெண் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்த ஆனந்த் ஜெயின், ஜெயஸ்ரீயின் பின்னணி குறித்தெல்லாம் அவ்வளவாக விசாரிக்கவில்லை.
இதையடுத்து, திருமணம் செய்து வைக்க கமிஷனாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார் லட்சுமி. பல வருடங்களாக திருமணம் ஆகாமல் மன வேதனையில் இருந்த ஆனந்த் ஜெயின் இதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி, முன்பணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட புரோக்கர் லட்சுமி, ஜெயஸ்ரீ -ஐ கடந்த மாதம் 15 ந்தேதி குமரகோட்டம் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
புரோக்கர் என்று திருமணத்தோடு ஒதுங்கிவிடாமல் திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி ஜெயஸ்ரீயுடன் பழகி வந்தார் லட்சுமி. இந்நிலையில் கடந்த 20 ந்தேதி ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு லட்சுமி பூனாவுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. போகும் போது, வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் சென்று விட்டதாகவும், பணம் மற்றும் நகையைக் கொள்ளையடிக்கும் நோக்கில் தனக்கு ஜெயஸ்ரீயை திருமணம் செய்து வைத்து புரோக்கர் லட்சுமி மோசடி செய்ததாகவும் ஆனந்த் ஜெயின் புகார் அளித்துள்ளார்.
புரோக்கர் லட்சுமியை பிடித்து விசாரித்தால்தான், ஜெயஸ்ரீயின் பின்னணி தெரியவரும் என்றும், இந்த இருவரால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் எல்லாம் தெரியவரும் என்று கூறும் காவல்துறையினர், அவர்களைத் தேடி பூனாவிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)