Skip to main content

மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

Manusmriti issue: Case for disqualification of Thirumavalavan was dismissed!

 

மனுஸ்மிருதி பற்றி பேசி நாட்டில் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவனை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொளிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், மனுஸ்மிருதியை தடைசெய்யக் கோரி, திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். தனது சொந்த அரசியல் லாபத்துக்காக இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, நாடாளுமன்ற செயலாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2,200 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதி குறித்து விளக்கமளிக்க, திருமாவளவன் சமஸ்கிருதத்தில் பண்டிதர் அல்ல. அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது. இதுபோன்ற தேவையற்ற விளக்கங்களை அவர் அளித்திருக்கக் கூடாது. அவரது சர்ச்சை பேச்சு காரணமாக அமைதியற்ற சூழல் உருவாகியுள்ள போதும், அவர் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசி வருகிறார்.  இதன் மூலம், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகக் கூறி அவர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ‘பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாடாளுமன்ற செயலாளருக்கு அக்டோபர் 27-ல் மனு அளித்தோம். அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்.’ என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.  அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது. மனுஸ்மிரிதி சட்ட புத்தகம் இல்லை. மனுஸ்மிரிதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா? என்பது தெரியாது.’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

 

cnc

 

மனுதாரர் தரப்பில், எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதை மனுதாரர் தரப்பு ஏற்றுக் கொண்டதை அடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், உரிய அரசியல் சட்ட பிரிவுகளைக் குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்தனர். மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.