man passed away Coimbatore

Advertisment

கோவை மாவட்டம் மணியக்காரம்பாளையத்துக்கு அருகே உள்ளதுரவீந்திரநாத் தாகூர் சாலை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. 70 வயதான இவர், அவருக்குச் சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவரது இளைய மகனான தினகர் என்பவர், தங்களுடைய தோட்டத்தில் உள்ள விவசாய வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 30 வயதான தினகர் சற்று ஒல்லியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக கவலைப்பட்ட இவர், தனது உடம்பை மெருகேற்ற வேண்டும் என்பதற்காகபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி, தினகர் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றுவதற்காக புரோட்டின் பவுடரை உட்கொண்டு வந்த தினகர், அதிக அளவு அசைவ உணவுகளையும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதில், விதவிதமான உணவுகளை காலை, மதியம், இரவு என மூன்று வேலைகளும் வித்தியாசமாக சாப்பிட்டு வந்துள்ளார். இதனிடையே தினகருக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதோடு வாந்தியும் எடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, தினகரின் பெற்றோர் அவரை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், மாத்திரையை சாப்பிட மறுத்த தினகர், வயிற்று வலியால் துடித்துள்ளார். இதைப் பார்த்து பதற்றமடைந்த அவரது பெற்றோர், தினகரை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினகரைதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி தினகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தினகரின் பெற்றோர், என்ன செய்வது எனத்தெரியாமல் கண்ணீர்விட்டுக் கதறி அழுதுள்ளனர். தன்னுடைய மகனுக்கு திருமண வரன் பார்த்து வந்த நேரத்தில், இப்படி நடந்ததை எண்ணி, தேம்பித்தேம்பி அழுகின்றனர்.

Advertisment

இதையடுத்து, இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார், தினகரின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த தினகர், புரோட்டின் பவுடரை அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்தாரா? அல்லது கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்ட தினகர் அதிகளவு அசைவ உணவுகளை சாப்பிட்டதால் உயிரிழந்தாரா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நடந்த இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.