மின் வேலி

கள்ளக்குறிச்சி அருகே மின்சார வேலியில் சிக்கி வியாபாரி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொறையூர் கிராமத்தை சேர்ந்த தனபால் (46)ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் அவரது ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைக்கும்போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போய்விட்டது. உடனே காணாமல் போன ஆட்டைத்தேடுவதற்காக சென்றுள்ளார். ஆனால் அதைத் தேடிச் சென்ற தனபாலூம் வீட்டுக்கு வரவில்லை.

Advertisment

அவரைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தேடி சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள சிவலிங்கம் என்பவரின் விளைநிலத்தில் காட்டு விலங்குகளுக்கு போடப்பட்டுள்ள மின் சாரவேலியில் சிக்கி தனபால் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து வரஞ்சரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தனபால் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணி வரை தனபால் உடல் பிரேத பரிசோதனை செய்து தரப்படவில்லை என்று கோபமடைந்த தனபால் உறவினர்கள் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பியன்மாதேவி என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எலவனாசூர்கோட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனவிலங்குகளுக்கு போடப்படும் மின்சார வேலியில் சிக்கி மனிதர்கள் இறப்பது தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன. உதாரணமாக சமீபத்தில் வேப்பூர் கள்ளக்குறிச்சி பகுதியில் இது போன்ற மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒருவர்திருடிவிட்டு தப்பி ஓடும்போது வேப்பூர் அருகே விளை நிலத்தில் போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்து கிடந்தார். மற்றொருவர் தன்னுடைய விவசாய நிலத்திலேயே நிலைதடுமாறி விழுந்து இறந்து போய் உள்ளார்.

இந்த சம்பவங்களை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் திருட்டுத்தனமாக சட்டத்திற்கு புறம்பாக விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.