Skip to main content

காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார்! 

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Man arrested in salem who got money from couples

 

காதல் ஜோடிகளைக் குறி வைத்து மிரட்டி பணம், நகைகளைப் பறித்த ஆசாமி மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவும் காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

 

சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பட்டர்ஃபிளை மேம்பாலம் அருகே காதலனுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், காதலனுடன் இளம்பெண் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டு இருப்பதை அலைபேசியில் பதிவு செய்துள்ளார். பின், காதலனை மிரட்டி அங்கிருந்து விரட்டி விட்ட மர்ம நபர், அந்தப் பெண்ணிடம், காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி அவரிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.  இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். 

 

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் அல்லிக்குட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சரவணன் (45) என்பவர்தான் சம்பவத்தன்று இளம்பெண்ணிடம் நகை, பணத்தை மிரட்டிப் பறித்துச் சென்றார் என்பது தெரியவந்தது. அவருடைய அலைபேசி பதிவுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காதலர்களுடன் இருக்கும் படங்கள், காணொளி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

 

அவரிடம் விசாரணை நடத்தியதில், காதலில் ஈடுபடும் இளம்பெண்களை குறி வைத்து அவர்களை பின்தொடர்வதும், அவர்களின் அலைபேசி எண், புகைப்படங்கள் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பதையே வேலையாக வைத்திருந்தது தெரியவந்தது. சரவணன் மீது இரும்பாலை காவல்நிலையத்திலும் இதேபோல் ஒரு புகார் பதிவாகி உள்ளது. இதையடுத்து அவரை கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 


அதேசமயம், இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் இருந்தால் அவர்கள், சேலம் மாநகர காவல்துறையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவர்களுடைய பெயர், இதர விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை அறிவித்து இருந்தது. இதற்காக கொண்டலாம்பட்டி சரக உதவி ஆணையர் ஆனந்தி 9159222580, சேலம் மாநகர சமூக ஊடகப்பிரிவு உதவி ஆய்வாளர் கீதா 9498178630 ஆகியோரின் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க துணை ஆணையர் லாவண்யா தலைமையில் உதவி ஆணையர்கள் அசோகன், ஆனந்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார். 

 

இது ஒருபுறம் இருக்க, ஜன. 5ம் தேதி தாதகாப்பட்டி எஸ்.வி.ஆர் நகரைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அன்னதானப்பட்டி தனியார் திருமண மண்டபம் அருகே வரவழைத்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒன்றரை பவுன் நகையை சரவணன் பறித்துச் சென்றார் எனத் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் அயூப்கான் விசாரணை நடத்தி, சரவணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மாநகரில் சரவணன் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், நான்கு பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து உதவி ஆணையர்கள் ஆனந்தி, அசோகன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மது போதையில் போலீசார் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Alcoholic attack on police; video goes viral

அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்த பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். 

இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்து சேலையூர் காவல் நிலைய இரவு நேர காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது காவலரை காலால் தாக்கி போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் விரல் ஆக்கி வருகிறது.

Next Story

சிறுமிகளை திருமணம் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோபியை சேர்ந்த ஆசிப் (28) என்பவரும் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கிருஷ்ணவேணி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிப் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.