மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தமிழகத்திற்கு வெறும் ஒத்த செங்கல்லை மட்டும் நட்டு வைத்துவிட்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்று கூறியது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த ஒத்த செங்கல்தான் இருக்கிறது என்று ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்தார். இது அரசியல் களத்தில் பலரது கவனத்தையும் பெற்றது.
இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது.