சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் முதன்முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்து, அதை செல்பி எடுத்துக் கொண்டாடினர்.

  Local body election- Women celebrating taking selfie

Advertisment

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 27) வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இளம் தலைமுறை வாக்காளர்கள் பலர் முதன்முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதைக் காண முடிந்தது. குறிப்பாக, இளைஞர்களைக் காட்டிலும் இளம்பெண்கள் பலர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிப்பட்டி அரசுப்பள்ளியில் ஒரே இடத்தில் ஐந்து வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையத்தில் முதன்முதலாக லாவண்யா, பிரியதர்ஷினி, பார்கவி ஆகியோர் வாக்களித்தனர். இதுகுறித்து கல்லூரி மாணவிகளான லாவண்யா, பிரியதர்ஷினி ஆகியோர் கூறுகையில், '' நம் ஊருக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்று எல்லோரும் சொன்னாங்க. முதன்முறையாக வாக்களித்திருக்கிறோம். வாக்குச்சீட்டில் வைக்கப்படும் முத்திரை (சீல்) கட்டையில் இரண்டு பக்கமும் சீல் இருந்ததால் எந்தப்பக்கம் வைப்பது என்று குழப்பம் இருந்தது.

Local body election- Women celebrating taking selfie

இருபுறமும் ஒரே சீல்தான் என்று வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அதிகாரிகள் கூறினர். நான்கு வாக்கு போட வேண்டும் என்பதால் வாக்குச்சீட்டில் முத்திரை வைத்தபிறகு அதை எப்படி மடிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. பிறகு, மையத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் வாக்குச்சீட்டுகளை மடித்துக் கொடுத்தார். அவற்றை அங்கிருந்த பெட்டியில் போட்டோம்,'' என்றனர்.

மற்றொரு கல்லூரி மாணவியான பார்கவி கூறுகையில், ''தனியார் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். தேர்தலில் வாக்களிப்பது என்பது எனக்கு இதுதான் முதல் அனுபவம். இந்த தேர்தலில் எங்களுடைய சொந்தக்காரர்களும் போட்டியிடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று சொன்னார்கள். வாக்களித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தேர்தலில் நான் நான்கு வாக்குகள் போட்டேன்,'' என்றார்.

Local body election- Women celebrating taking selfie

வீரபாண்டி அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி எண் 81ல், நான்கு மணிக்குப் பிறகும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு முதல்முறையாக வாக்களிக்க வந்திருந்த இளம்பெண்கள் மூவர், தேர்தலில் வாக்களிக்கவந்ததை செல்போனில் செல்பி படம் எடுத்துக் கொண்டாடினர். சக வாக்காளர்களும் சிலரும், அவர்களைப் பார்த்து தாங்களும் செல்போன்களில் செல்பி படம் எடுத்துக் கொண்டாடினர்.