Skip to main content

12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

Life sentence to youth salem court order

 

மேட்டூர் அருகே, 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் லோகநாயகி. இவர் தன் குழந்தைகளுடன் மேட்டூர் காவிரி பாலம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது மேட்டூர் மருத்துவமனை காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார் (28) என்பவருடன் லோகநாயகிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது அலைப்பேசியில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போனதால் நவீன்குமாரிடம் கொடுத்து பேட்டரிக்கு சார்ஜ் போட்டுத் தரும்படி கேட்டுள்ளார். அப்போது நவீன்குமார், சார்ஜ் போட்ட பிறகு அலைப்பேசியை லோகநாயகியின் மகளிடம் கொடுத்து அனுப்புவதாகக் கூறியுள்ளார்.  

 

அதன்பேரில் லோகநாயகி, தனது 12 வயதே ஆன மகளை நவீன்குமார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். சிறுமி தனியாக வந்திருப்பதை அறிந்த நவீன்குமார், அவரை ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத குப்பைக் கிடங்கு பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கூலி வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தாயிடம், நவீன்குமார் தன்னை வன்புணர்வு செய்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே சொல்லி இருக்கிறார்.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லோகநாயகி, மேட்டூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கார்த்திகேயனி, நவீன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இந்த வழக்கின் விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, மார்ச் 29ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். நவீன்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.