Skip to main content

சிறுவனை வன்கொடுமை செய்த வழக்கு; திருநங்கைகள் 2 பேருக்கு ஆயுள்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Life sentence for 2 transgenders

சேலம் அருகே, சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழகத்தில் முதன்முதலாக திருநங்கைகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், காக்காபாளையத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தான். கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை மாதம் வார விடுமுறை நாளில், உள்ளூரைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். பின்னர் வீட்டிற்கு சோர்வுடன் தளர்ந்த நடையில் சென்று சேர்ந்தான். 

இதைப்பார்த்த பெற்றோர் மகனிடம் விசாரித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காயத்ரி (26), முல்லை (25) என்ற இரண்டு திருநங்கைகள் சிறுவனை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறுவன் வேலை செய்து வந்த உணவகத்திற்கு திருநங்கைகள் அடிக்கடி சாப்பிடச் சென்று வந்ததில் அவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டனர். சம்பவத்தன்று அவனுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து பெற்றோர், தங்கள் மகனிடம், யார் அழைத்தாலும் தனியாகச் செல்லக்கூடாது என புத்திமதி கூறியுள்ளனர். ஆனால் சில நாள்கள் கழித்து, மீண்டும் சிறுவன் வீடு திரும்பவில்லை. காடையாம்பட்டி பகுதியில் சிறுவன் தனியாக சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் பெற்றோர் மகனை மீட்டு வந்தனர். காயத்ரி, முல்லை ஆகிய இரண்டு திருநங்கைகள்தான் சிறுவனை மீண்டும் காடையாம்பட்டிக்கு ஆசை வார்த்தைகூறி அழைத்துச்சென்று, அவனிடம் பாலியல் உறவு வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து காக்காபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநங்கைகள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றம்சாட்டப்பட்ட திருநங்கைகள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும் விதித்து பிப். 22ம் தேதி தீர்ப்பு அளித்தார். 

இதையடுத்து அவர்கள் இருவரும் கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில், போக்சோ வழக்கில் திருநங்கைகள் இருவர் தண்டிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்