அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் சிக்கி சிறுத்தை புலி உயிரிழந்த சம்பவத்தில் ஆடுகளுக்கு கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தை புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய அந்த சிறுத்தை புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்கு தற்காலிக கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், ‘நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிக கிடை அமைத்தவரை கைது செய்வதா என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வனத்துறை தங்களை காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவரின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிடை ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புலி இறந்து விட்டது எனச் சொல்லுகிறார்கள். வனத்துறை தான் இறந்து விட்டது என சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்கவில்லை. மூன்று நாள் கழித்து விசாரணைக்காக என் மகனை கூட்டிக்கொண்டு சென்று விட்டனர். விரைவில் விட்டு விடுவோம் என சொன்னார்கள். நாங்களும் நான்கு மணி வரை பார்த்தோம். ஆடு மேய்ப்பதற்கு ஆள் இல்லை. அப்புறம் என்ன என கேட்கையில் கைது பண்ணி கூட்டி சென்றுவிட்டதாக சொல்கின்றனர்” என்றார்.
வேலியில் சிக்கியது இரண்டு சிறுத்தை புலிகள் என்றும் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொன்று தான் உயிரிழந்து விட்டதாக வனத்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.