
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர், சூசைபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அதிக அளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கிக்கொண்டு கால்நடைகளைத்தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது. இது குறித்து தாளவாடி வனத்துறைக்குத்தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை, கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டைக் கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர். தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)