Skip to main content

''பொன்னு வெளையிற பூமி... இத விட்டுட்டு நாங்க எந்த ஆதரவில் வாழ்றது'' - வயலில் சாலை அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Leaving this, on what support will we live' - Farmers protest against construction of road in arable land

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விவசாய நிலங்களில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

தஞ்சை மாவட்டம் அரசூரிலிருந்து விளாங்குடி சாலை வரை 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கண்டியூர், கல்யாணபுரம், கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட பல கிராமங்களில் பச்சை பசேலென நெற்பயிருடன் காணப்படும் வயல்வெளிகளில் மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணியானது நடைபெற்றுள்ளது.

 

Leaving this, on what support will we live' - Farmers protest against construction of road in arable land

 

தற்பொழுது காட்டுக்கோட்டை பாதை கிராமத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் வளர்ந்து நிற்கும் நெற்பயிர்கள் மீது மண்ணைக் கொட்டி சாலை அமைப்பதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பயிர் மேலேயே மண்ணைக் கொட்டி புறவழிச்சாலை அமைக்கிறார்கள். இதைத் தடுத்துக் கேட்டால் எல்லாவற்றுக்கும் செட்டில்மெண்ட் பண்ணியாச்சு என்கிறார்கள். இதுவரைக்கும் யாருக்கும் ஒரு நயா பைசா பணம் கூட கொடுக்கக் கிடையாது. முன்னறிவிப்பும் கொடுக்கவில்லை. பொன்னு விளையிற பூமி... இத விட்டுவிட்டு நாங்க என்ன செய்வோம். எந்த ஆதரவில் நாங்கள் வாழ்வது.ரொம்ப தண்ணீர் தேங்கும் இடம் இது. பக்கத்தில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் நாளை இந்த இடம் எல்லாம் நீரில் மூழ்கி விடும்' என்று வேதனை தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டமானது வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.