
லால்குடி அருகே மணக்கால் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த அன்பழகன் மகன் பிரகலாதன்(38). இவர் லால்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளராகப் பதவி வகித்து வருகிறார். இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பிரகலாதனுக்கு தலைவலி மயக்கம் ஏற்படவே கோவிலின் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத பிரகலாதனை விடுதி உரிமையாளர் கதவைத் தட்டிக் கூப்பிட்டுள்ளார். அப்போது கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவின் லாக்கை உடைத்துப் பார்த்தபோது கீழே கிடந்துள்ளார்.
லாட்ஜ் உரிமையாளர் சமயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்ததின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகலாதன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.