சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் நேற்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி 15 மாத சிறை வாசத்திற்குப் பிறகு நேற்று இரவு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான வாத பிரதிவாதங்களில் ஆரம்ப முதலே அனைத்திலும் கலந்து கொண்ட வழக்கறிஞர் ராம் சங்கர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது; “உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாலேயே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுக்கிறோம் என்று கூறினார்கள். அதற்கான நிபந்தனைகளும் விதித்தார்கள்; ஒரு சாதாரண கைதிக்கு விதிக்கும்படியான, ‘சாட்சியங்களைக் களைக்கக் கூடாது, பாஸ்போட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், வாரத்தில் இரண்டு நாள் காவல்நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என்ற நிபந்தனைகள் தான் செந்தில்பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கில் 2,500க்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளது. அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றால் வழக்கு முடிய நீண்ட காலமாகும். அதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குகிறோம்” என்றார்கள்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை மூன்று மாத காலத்திற்குள் செந்தில் பாலாஜியின் வழக்கை முடிக்க வேண்டும் என்று ஒரு தவறான தீர்ப்பை வழங்கியது. ஆனால், மூன்று மாதத்திற்குள் அமலாக்கத்துறை வழக்கை முடிக்க முடியாது; அதற்கு முன்பு உள்ள வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அதனை முடித்துவிட்டுத்தான் அமலாக்கத்துறை வழக்கை முடிக்க வேண்டும். அதுதான் சட்டமும் கூட.
செந்தில் பாலாஜியின் வழக்கு வேண்டும் என்றே அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்டது. ஏனென்றால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜின் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் சட்ட விரோதமாகப் பரிவர்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் அதில் 79 லட்சம் ரூபாய், அவர் எம்.எல்.ஏவாக இருந்தபோதே ஊதியமாகப் பெற்ற சம்பளத் தொகை. அதனைக் கழித்துவிட்டுப் பார்த்தால் மீதம் இருக்கும் தொகை அவர் செய்யும் விவசாய தொழிலில் இருந்து வந்தது. செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்துமே, அமலாக்கத்துறையால் சோடிக்கப்பட்டது என்ற வாதங்களை உச்சநீதிமன்றத்தில் முன் வைத்தோம். மேலும் செந்தில் பாலாஜி வீட்டில் எடுக்கப்பட்ட பென் டிரைவும், அமலாக்கத்துறை வைத்திருக்கும் பென் டிரைவும் ஒன்றல்ல என்று எங்களின் கருத்தைத் தெரிவித்தோம். இறுதியாக எங்களது வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.