Skip to main content

சென்னையில் பல் மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சட்டக்கல்லூரி மாணவர் கைது!

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
dental


 

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் கானத்தூரைச் சேர்ந்த பல் மருத்துவரிடம் ரவுடி ஒருவர் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரவுடி மிரட்டியது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அருகேயுள்ள பல் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக இருக்கிறார் ஹரிஸ். அவருடன் இணைந்து அவரது மனைவியும் பல் மருத்துவருமான வைசாலியும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஹரீசை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரவுடி ஒருவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். எதற்கு பணம் கொடுக்கவேண்டுமென டாக்டர். ஹரிஸ் கேட்க, பணம் கொடுக்கவில்லையெனில் மனைவியையும், மகளையும் கொலை செய்ய நேரிடும் என்று ரவுடி மிரட்டும் ஆடியோ வெளியானது.

இந்நிலையில், மருத்துவர் ஹரீஸை ரவுடி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் போலீசார் தாமாக முன்வந்து நடவடிக்கையில் இறங்கினர். இதனைதொடர்ந்து மருத்துவர் ஹரீஷை தொடர்பு கொண்ட கானத்தூர் போலீஸார், அவரிடம் புகாரைப் பெற்று மிரட்டிய ரவுடி யார் என்று விசாரித்து வந்தனர்.

இந்நநிலையில், இந்த புகார் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, விசாரணையில் மருத்துவர் ஹரிஸை மிரட்டியது வேல்ஸ் சட்டக்கல்லூரியை சேர்ந்த மாணவர் முருகன் என்பது தெரியவந்தது. மேலும் சட்டக்கல்லூரி மாணவர் முருகனுடன் மிரட்டல் சம்பவத்துக்கு துணையாக இருந்த குரோம்பேட்டை அர்ச்சனாபுரத்தை சேர்ந்த மெக்கானிக் பாலா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில், இவர்கள் இருவரும் இணைந்து இது போல் பணம் வசதியுள்ளவர்களை ரகசியமாக நோட்டம் விட்டு அவர்கள் தொலைபேசி எண்ணுக்கு மிரட்டல் அழைப்பு விடுத்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சார்ந்த செய்திகள்