Skip to main content

சாலையோர கடையை துரத்தும் பெரிய துணிக்கடை - கண்ணீர் விடும் தொழிலாளிகள்

Published on 20/10/2018 | Edited on 21/10/2018
r2

 

நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் புதுத்துணி எடுக்க துணிகடைகளுக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரு சிறு மற்றும் பெரு நகரங்களில் உள்ள துணிக்கடைகளுக்கு கூட்டம் செல்கிறது. அப்படி வரும் பொதுமக்களுக்கு நடைபாதையில் உள்ள கடைகள் தொந்தரவாக உள்ளதாக கூறி அவற்றை தங்களது பண பலத்தை காட்டி அப்புறப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டு உள்ளன.

 

திருவண்ணாமலை நகரம் தேரடி வீதியில் பல துணிக்கடைகள் உள்ளன. இந்த துணிக்கடைகள் எதுவும் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு தேரடி வீதியில் அண்ணாமலையார் கோயில் எதிரே கட்டப்பட்டது பொன்ராஜன் என்கிற துணிக்கடை. 3 அடுக்கு மாடியாக உள்ள இந்த துணிக்கடை கட்டப்படும்போது பார்க்கிங் வசதியோடு கட்டப்படுகிறது என அனுமதி பெற்றுவிட்டு பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டி திறக்கப்பட்டது. 

 

r2

 

இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் இந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுப்பற்றி அறிந்தும் நகர போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. திருவிழா காலங்களில் அந்த கடைக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

 

இந்நிலையில் இன்று அக்டோபர் 20 ந்தேதி கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் வேறு கடைகளுக்கு சென்றுள்ளனர். 

 

இதனைப்பார்த்த கடை உரிமையாளர், தனது கடைக்கு அருகில் சாலை ஓரத்தில் உள்ள சிறு கடைகளால் தான் வாகனங்கள் நிறுத்த முடியவில்லை. அதனால் தான் வாடிக்கையாளர்கள் திரும்பி சென்றனர் என்று தனது கடைக்குள் பணியாற்றும் 10 ஆண் பணியாளர்களை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவரை ஒட்டி நடைபாதையில் தள்ளுவண்டியில் டிபன் கடையும், தரையில் பாயை விரித்து பொம்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர்களை காலி செய்ய கூறினர். அவர்கள் நாங்கள் ஏன் காலி செய்ய வேண்டும் நகராட்சிக்கு தினமும் 50 ரூபாய் வாடகை செலுத்துகிறோம், நாங்கள் உங்கள் கடைக்கு முன்பாக  கடை வைக்கவில்லை பின் எதற்கு காலி செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

 

r1

 

பொன்ராஜன் துணிக்கடையில் இருந்து வந்திருந்த பணியாளர்கள் கடைக்காரர்களை காலி செய்தே ஆகவேண்டும் என மிரட்டினர். அவர்கள் எங்களால் காலி செய்ய முடியாது என ஊறுதியாக கூறியதால் போலீசை வைத்து எப்படி காலி செய்யனும் என்று எங்களுக்கு தெரியும், நாங்க பார்த்துக்குறோம் என மிரட்டி விட்டு சென்றனர். இதனால் பயந்து போய் உள்ள கடைக்காரர்கள் நடைபாதை வியாபாரிகள் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.

 

அரசாங்கத்தை ஏமாற்றி சட்டவிரோதமாக கட்டிடம் கட்டியது மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் இந்த கடையினரிடம் சட்டத்தை காக்கவேண்டியவர்கள் சலாம் போடுவதால் தான் தன் கட்டிடத்துக்கு அருகில் கடை வைத்துள்ள ஏழைகளை இடைஞ்சலாக இருக்கிறது என விரட்டுகிறது என்று பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்