Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரத்திற்கு தயாராகும் இடம்! (படங்கள்) 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரத்திற்கு ஒரு ஏக்கர் அளவில் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையொட்டி இன்று (30.11.2021) கோயம்பேடு தக்காளி மார்க்கெட்டுக்குப் பின்புறம் கீரை, கொத்தமல்லி வியாபாரம் செய்யும் இடத்தை சுத்தம்செய்து இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை சி.எம்.டி.ஏ. அதிகாரி டி.ஆர்.ஒ. சாந்தி நேரில் ஆய்வு செய்தார். 

 

அப்போது மீன்பாடி வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து கூச்சலிட்டனர். அவர்களிடம் பேசியபோது, "கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இருந்தாலும் எங்களுக்கு முன்கூட்டியே இடத்தைக் காலி செய்ய அவகாசம் தராமல் திடுதிப்பென்று அதிகாரிகள் வந்து எங்கள் வண்டிகளை அப்புறப்படுத்தச் சொன்னால் நாங்கள் எங்கு போவது? இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்த்துவிட்டு பகலில்தான்  தூங்குவோம். பாதிபேர் தூங்கப் போய்விட்டனர். இப்போது அனைத்து வண்டிகளையும் எப்படி உடனே அப்புறப்படுத்த முடியும்" என்று புலம்பினர். இதைக் கேட்ட டி.ஆர்.ஒ., வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குத் தனி இடம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை கோயம்பேட்டில் தீவிரவாதி கைது!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
West Bengal person arrested in Chennai

உபா வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் (வயது 30) என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார். இவர் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடையவர் ஆவார். மேலும் இவர் ‘அன்சார் அல் இஸ்லாம்’ என்ற தீவிரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பதுங்கியிருந்த அனோகர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹபிபுல்லா என்ற தீவிரவாதி கொடுத்த தகவலின் பேரில் அனோகர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உபா சட்டம், தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.