Skip to main content

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா... பக்தர்களின்றி கோவில் வளாகத்தில் நடந்த மஹிஷா சூரசம்ஹாரம்! (படங்கள்)

Published on 17/10/2021 | Edited on 17/10/2021

 

தென் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா. லட்சக்கணக்கான பக்தர்கள் 10ம் நாள் அன்று கடற்கரையில் திரண்டு வந்து பக்தி கோஷத்தோடு மஹிஷா சூரசம்ஹாரத்தைக் கண்டு களித்து முத்தாரம்மனை தரிசிப்பர். ஆனால் கரோனாத் தொற்று பரவல் தடை காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆலய விழாக்கள் வெளியே நடக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளேயே நடந்தது.

 

குறிப்பாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலய நவராத்திரி தசரா திருவிழாவில் 10 நாட்களும் அம்மனுக்கு விஷேச பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்ததுடன் பல்வேறு திருக்கோலங்களுடன் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. தடை காரணமாக பக்தர்கள் தங்களின் ஊர்களிலேயே காப்பு கட்டி விரதம் அனுஷ்டித்தனர். முக்கியமாக வேண்டுதலின்படி சிறுவர், சிறுமியர் உட்பட பெரியோர் வரை பல்வேறு வேடமிட்டு அம்மனை வழிபட்டார்கள். வேண்டுதலின்படி கிராமங்களிலுள்ள தசரா குழுக்கள் பலவிதமான வேடமணிந்து கிராமப் புறங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

 

10ம் நாள் திருவிழா வழக்கம் போன்று மஹிஷா சூரசம்ஹாரம் அன்றைய நடு இரவு குலசேகரப்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நடப்பது மரபு. ஆனால் கரோனா பரவல் தொற்று தடைகாரணமாக, இந்த ஆண்டு மஹிஷா சூரசம்ஹாரம் ஆலய வளாகத்திலேயே அதிகாலை நடந்தது. பக்தர்கள் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் முக்கியஸ்தர்கள் உட்பட போலீசார் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

முன்னதாக காலை 06.00 மணிக்கு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டது. தசரா திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் காலை முதலே முத்தாரம்மனைத் தரிசிக்க அக்கம் பக்கப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால் கரோனா தடை காரணமாக போலீசார் ஊர்ப் பகுதிகளில் பேரிகாட்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் வந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பினர்.

 

சூரசம்ஹாரம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை மற்றும் பிற பகுதிகள் பக்தர்களின்றிக் களையிழந்து காணப்பட்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.