Skip to main content

போராட்டத்தை அறிவித்த மக்கள்; கூடங்குளம் அணுமின் நிலையம் எடுத்த அதிரடி முடிவு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Kudankulam Nuclear Power Plant Action taken on Examination cancelled

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அணுமின் நிலையம் அமைவதற்காக அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது நிலங்களைக் கொடுத்துள்ளனர். அதனால், கடந்த 1999 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மேலும், அணுமின் நிலையம் அமைவதற்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேர்வு நாளை (03-03-24) நடைபெறவிருந்தது. 

கடந்த 1999 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வு நடத்தப்படுவதாகவும், அந்த தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனக் கூடங்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மற்றும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும் சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக அணுமின் நிலையம் உறுதியாக அறிவித்தது.  

இந்த நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறும் என அப்பகுதி மக்கள் அறிவித்தனர். மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.